வாரணாசி, மே 17 – சில நாட்களுக்கு முன்னர்தான் நரேந்திர மோடி, அவர் போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் ஒரு மாபெரும் கூட்டத்தில் பேசுவதற்கு தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்டார்.
அதே நாளில் அவர் வாரணாசி தொகுதியின் மைய ஈர்ப்பாகத் திகழும் புனித கங்கை ஆற்றில் ஆரத்தி எடுத்து நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறுவதாக இருந்தது.
அந்த நிகழ்வுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.
ஆனால், தான் போட்டியிடும் தொகுதியிலேயே தனக்கு பேசத் தடை விதித்த, தேர்தல் ஆணையத்தின் முடிவால், அதிருப்தியுற்ற மோடி, கங்கை ஆற்றில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை அப்போது புறக்கணித்தார்.
ஆனால், இன்று மாலை வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளராக, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவிற்காக மீண்டும் வாரணாசிக்குத் திரும்பிய மோடி, கங்கை நதிக் கரையில், புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தில், புனித கங்கைக்கு ஆரத்தி எடுத்து நன்றி தெரிவிக்கும் வண்ணமயமான நிகழ்வில் கலந்து கொண்டார்.
அவருடன், அவரது அரசியல் வலது கரமான அமிட் ஷாவும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
11 ஆலய குருக்கள் கங்கை ஆரத்தி எடுத்த வேளையில், ஆரஞ்சு வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு மேடையில் அமர்ந்து அந்த நிகழ்வை மோடியும் அவரது குழுவினரும் அமைதியாக பக்தியுடன் கண்டு களித்தனர்.
பின்னர், தென்னிந்திய பாணியில், விபூதி அணிந்து, குங்குமப் பொட்டுடன் காட்சியளித்த மோடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.