கோலாலம்பூர், மே 18 – காணாமல் போன எம்.எச். 370 விமானம் குறித்து முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது பிரத்தியேக இணையப் பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரையில், போயிங் நிறுவனத்திடமும் சி.ஐ.ஏ. எனப்படும் அமெரிக்க மத்திய உளவுத் துறையிடமும் கேள்வி எழுப்பப்பட வேண்டுமென்று அவர் கூறியுள்ளார்.
“யாரோ எதையோ மறைக்கிறார்கள். மாஸ் எனப்படும் மலேசிய ஏர் லைன்சின் மீதும் மலேசியா மீதும் மட்டும் பழிபோடுவது நியாயமல்ல. மாறாக, போயிங் மீதும் சிஐஏ மீதும் சந்தேகம் எழுகின்றது” என்ற தோரணையில் அவர் தனது இணையப் பக்கத்தில் எழுதியுள்ளார்.
போயிங் நிறுவனத்திற்கு தெரிந்திருக்கலாம்
“விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்கலாம் அல்லது விபத்துக்குள்ளாகலாம். ஆனால், விமானங்கள் காணாமல் போவதில்லை. தற்போது மிகவும் சக்திபடைத்த தொடர்புத் துறை தொழில் நுட்பங்கள் மூலம் விமானங்களால் தடையின்றி செயல்பட முடியும்” என்று கூறியிருக்கும் மகாதீர்,
“விமானத்தின் தொடர்பு செயல்பாடுகள் வேண்டுமென்றே செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளது. துணைக் கோளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய விமானப் பயண பதிவுகள் எங்கே” என்றும் எழுப்பியுள்ளார்.
போயிங் நிறுவனம் காரணமா?
“எம்.எச்.370 விமானம் போயிங் 777 விமானமாகும். அதனைத் தயாரித்தது போயிங். ஆகவே விமானத்தின் தொடர்புத்துறை மற்றும் ஜி.பி.எஸ். எனப்படும் பயணப் பாதையைக் காட்டும் கருவிகளை விமானத்தில் பொருத்தியதும் போயிங்தான். அவற்றை செயல் இழக்கச் செய்தால் செய்தால் போயிங்கிற்கு நிச்சயம் அதுகுறித்து தெரியும். அவற்றை சுலபமாக செயல் இழக்கச் செய்யவும் முடியாது. விமானத்தை விமானியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து தானாக இயங்கச் செய்யும் தொழில் நுட்ப சாதனத்துக்கான உரிமத்தை போயிங் நிறுவனம் 2006ஆம் ஆண்டு பெற்றுள்ளது” என்றும் மகாதீர் தனது கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
“அதன்படி பார்த்தால் எம்.எச்.370 விமானக் கட்டுப்பாட்டை போயிங்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் வெளியில் இருந்தவாறு தங்களின் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ள முடியும். இந்த சூழ்நிலையில் விமான பாகங்களையும், எண்ணெய் கசிவுகளையும் கண்டுபிடிப்பது என்பது பண விரயம்தான்” என்றும் மகாதீர் சாடியுள்ளார்.
“பயங்கரவாத முறியடிப்புக்காக நிலத்தில் இருந்தவாறு விமானத்தைத் தானாக இயங்கச் செய்வதாக கூறப்படும் முறையை போயிங் விளக்க முன்வர வேண்டும். விமானிகள் கொந்தளிப்பான கடலில் தரையிறங்கினார்கள் என்பதை தம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை” என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.
“இந்த விவகாரத்தில் யாரோ எதையோ மறைக்கின்றார்கள். போயிங் அல்லது சி.ஐ.ஏ. பற்றி ஊடகங்கள் எதனையும் எழுத மாட்டார்கள் என்பதால், எனது இணையப் பக்கத்தில் இதைப்பற்றி எழுதியிருக்கின்றேன்” என்றும் மகாதீர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.