புதுடில்லி, மே 19 – தனக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திரமோடி தொலைபேசி வழி நன்றி தெரிவித்தார்.
அப்போது, தமிழக அரசுக்கு, தன் தலைமையிலான மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்என்றும் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.
(ஜெயலலிதாவும் மோடியும் முன்பு சந்தித்துக் கொண்ட கோப்பு படம்)
நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, பிரதமராக பதவி ஏற்க உள்ள நரேந்திரமோடிக்கு, தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதினார்.
இதையடுத்து ஜெயலலிதாவுக்கு நரேந்திர மோடி தொலைபேசியில் நேரடியாக அழைத்து நன்றி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பெற்றுள்ள மாபெரும் வெற்றிக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த உரையாடலின் போது இந்திய பிரதமராக சிறப்பாக செயல்படவேண்டும் என்று நரேந்திரமோடிக்கு, ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.
அதற்கு நன்றி தெரிவித்துக்கொண்ட நரேந்திரமோடி, தமிழக அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி, நல்லுறவுடன் செயல்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.
இதற்கிடையில், மத்திய அரசாங்கத்தில் அதிமுக இடம் பெறுமா என்ற ஆரூடங்கள் ஒரு புறம் இருக்க, மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏற்கனவே இருக்கும் நெருக்கம், பரஸ்பர நட்பு ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய அரசாங்கத்திற்கும், தமிழக அரசுக்கும் சிறந்த நல்லுறவுகள் எதிர்காலத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மோடி, ஜெயலலிதா இரண்டு தரப்புக்கும் நெருக்கமானவராக இருக்கும் பத்திரிக்கையாளர் சோ போன்றவர்களும் இரண்டு தரப்பும் ஒன்றிணைந்து செயல்பட பின்னணியில் மும்முரமாக செயல்படுவார்கள் என்றும் நம்பலாம்.