நியூயார்க், மே 21 – இங்கிலாந்து நாட்டில் முஸ்லிம் மத போதகராக இருந்தவன் அபு ஹம்சா. இளைஞர்களிடையே மத வேற்றுமையை ஏற்படுத்தி, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் தீவிரவாத தாக்குதல் நடத்த துணையாக இருந்தவன்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் பயிற்சி முகாம்களுக்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்பி வைத்து, தீவிரவாதிகளாக மாற்றியதில் இவனது பங்களிப்பு முக்கியமானது என்று கூறப்படுகிறது. இது போன்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இங்கிலாந்து அரசு அவனை கைது செய்தது.
இந்நிலையில், அபு ஹம்சாவை தங்களிடம் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. சுமார் பத்தாண்டு கால சட்டப் போராட்டத்துக்கு பின்னர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவன் மீது, அமெரிக்காவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
தற்போது, அவன் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளி என்று நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் எனவும், அதில் அவனுக்கு அதிகபட்சமாக 100 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.