பேங்காக், மே 21 – தாய்லாந்தில் கடந்த ஆறு மாதங்களாக ஆளும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்காக அந்நாட்டு அரசை, இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் இராணுவச் சட்டம் விதிக்கப்பட்டுள்ளதால், தலைநகர் பேங்காக்கில் குவிந்துள்ள போராட்டக்காரர்கள் அவர்களது ஆர்ப்பாட்டக்களத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு செயல்படும் 10 அரசியல் சேனல்களும் எதையும் ஒளிபரப்பக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொலைகாட்சி மற்றும் வானொலி நிலையங்கள் எந்தவித வழக்கமான நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப கூடாது. தேவைப்பட்டால் இராணுவம் ஆணையிடும் நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்பலாம். மேலும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் எவ்வித செய்திகளையும் செய்தித்தாள்களில் வெளியிடக்கூடாது” என்று அறிவித்துள்ளது.
இராணுவக் கட்டுப்பாட்டில் வந்துள்ள தாய்லாந்தில், ஜனநாயக முறைப்படி நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.