பெய்ஜிங், மே. 23 – சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் உரும்கி என்ற இடத்தில் உள்ள திறந்தவெளிச் சந்தையில், இன்று காலை 7.50 மணி அளவில் தீவிரவாதிகளால் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
திறந்தவெளிச் சந்தையில் ஜன நெருக்கடி நிறைந்த சமையத்தில், அங்கு வேகமாக வந்த 2 வாகனங்கள் பலத்த சத்தத்துடன் வெடித்தன. சுமார் 12 முறை தொடர்ச்சியாக குண்டு வெடித்ததில், ஏராளமானோர் பலியானதாக சீனா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், மீட்கப்பட்டவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துர்கிஸ்தான் இஸ்லாமிக் அமைப்பும், அல்கொய்தா இயக்கமும் தான் கலவரத்துக்கு காரணம் என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த மாதம் ஷின்ஜியாங் மாகாணத்தில் ஒரு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 3 பேர் பலியானார்கள். 79 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த மாகாணத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிரவாதிகள் முயற்சித்து வருவதும். தற்போது உரும்கி சந்தையில், குண்டு வெடிப்பு நடந்துள்ளதும் சீன அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.