Home India Elections 2014 மோடி அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் # 2 : முன்னாள் இராணுவத் தளபதி வி.கே.சிங்

மோடி அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் # 2 : முன்னாள் இராணுவத் தளபதி வி.கே.சிங்

636
0
SHARE
Ad

VK-Singhபுதுடில்லி, மே 23 – பொதுவாக இந்திய அரசியலில் உயர்நிலை பதவி வகித்த முன்னாள் இராணுவப் பொறுப்பாளர்கள், பதவி ஓய்வுக்குப் பின்னர் நேரடி அரசியலில்  ஈடுபடுவது மிகவும் அபூர்வம்.

ஆனால், இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதியான 63 வயது, வி.கே.சிங், (முழுப் பெயர் விஜய்குமார் சிங்)  தனது பதவி ஓய்வுக்குப் பின்னர் பாஜகவில் சேர்ந்து, உத்தரப் பிரதசே மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலிலும் நின்று,மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றியும் பெற்றிருக்கின்றார்.

உத்தரப் பிரதேசத்திலுள்ள காசியாபாத் (Ghaziabad) தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வி.கே.சிங் (படம்) 5 இலட்சத்து 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

வடோடோராவில் வெற்றி பெற்ற நரேந்திர மோடிதான் இதுவரை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் அதிகமான பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றிருக்கின்றார்.

அவரை அடுத்து இரண்டாவது நிலையில் அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற வேட்பாளராக, வி.கே.சிங் திகழ்கின்றார்.

பாதுகாப்புத் துறையில் முக்கிய பொறுப்பு

Singh VK 440 x 215நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சிலோ, அல்லது வெளிநாட்டுக் கொள்கைகளில் மோடியின் பாதுகாப்பு ஆலோசகராகவோ முக்கிய பொறுப்புகளில் சிங் அமர்த்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மையில், காங்கிரஸ் அரசாங்கம் அவசரம் அவசரமாக புதிய இராணுவத் தளபதியாக டல்பீர் சிங் சுஹாக்கை நியமித்ததற்கு வி.கே.சிங் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமையவிருக்கும் மோடி அரசாங்கத்தில் இராணுவம் சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும், குறிப்பாக பாகிஸ்தானுடனான இராணுவ உறவுகளிலும், தீவிரவாச அச்சுறுத்தல்களைத் துடைத்தொழிப்பதிலும் வி.கே.சிங் முக்கிய பங்காற்றுவார் என்பது புதுடில்லி அரசியல் வட்டாரங்களின் கணிப்பு.

2010 முதல் 2012 வரை இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்ற சிங், ஒரு முன்னாள் அதிரடிப் படை வீரராவார் (Commando).

அதிரடிப் படை வீரராக இருந்து, இந்திய இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற முதல் நபர் சிங் என்று இராணுவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,

அதேபோன்று, தனது பிறந்த தேதி குறித்த சர்ச்சையில் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடுத்த முதல் இராணவத் தலைவரும் சிங்தான்.

மோடி அரசாங்கத்திலும் முக்கிய பொறுப்பு வகித்து அதிரடியான விவகாரங்களைக் கையாள்வார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

-இரா.முத்தரசன்