Home இந்தியா மோடி அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் # 3 : அற்புதமாக வாதாடும் அருண் ஜெட்லி

மோடி அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் # 3 : அற்புதமாக வாதாடும் அருண் ஜெட்லி

677
0
SHARE
Ad

M_Id_434005_Arun_Jaitleyபுதுடில்லி, மே 26 – பாஜகவின் முக்கிய, மூத்த தலைவர்களாக பலர் இருந்தாலும், தேர்தல் காலத்தில் பாஜக எதிர்நோக்கிய பிரச்சார எதிர்த் தாக்குதல்களை தொலைக்காட்சிகளின் வழி நேருக்கு நேர் எதிர்கொண்டு நின்றவர்கள் ஒரு சிலரே!

அவர்களில் முக்கியமானவர் அருண் ஜெட்லி.

ஏற்கனவே, ராஜ்ய சபா எனப்படும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் பாஜகவின் தலைவராக திறம்பட செயலாற்றி வந்திருந்தாலும், இந்த தேர்தலின் மூலம் புகழின் உச்சிக்கு சென்று விட்டார் ஜெட்லி.

#TamilSchoolmychoice

மோடியுடன் நெருக்கமானவர், அவருக்கு ஆலோசகர் என தகவல் ஊடகங்கள் ஒருபுறம் அவரைக் கொண்டாட,

இன்னொரு புறத்தில், பாஜகவை நோக்கி கேள்விக் கணைகள் புறப்பட்டபோது உடனுக்குடன் தொலைக்காட்சியில் தோன்றி பாஜகவை தற்காத்து, தெளிவான ஆங்கில, இந்தி உச்சரிப்புடன் ஆணித்தரமாக வாதிட்டவர் அவர்.

முக்கிய பிரச்சனைகளில் பத்திரிக்கையாளர் மாநாட்டைக் கூட்டி பாஜகவின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கங்களுடன், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் அவர் தெளிவாக எடுத்துரைத்ததை தொலைக்காட்சிகளின் வழி மக்கள் அடிக்கடி ரசித்தனர்.

இதனால், குறுகிய காலத்திலேயே பாஜகவின் அடுத்த கட்ட தலைவராக ஜெட்லி அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.

மோடிக்கு நெருக்கமான மற்றொரு புள்ளியான அமிட் ஷாவுடனும் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருப்பவர் ஜெட்லி என்பது அவரது இன்னொரு அரசியல் பலம்.

அமிர்தசரசில் தோல்வி

இருப்பினும் இந்த பொதுத் தேர்தலில் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்து நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார் ஜெட்லி.

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட அருண் ஜெட்லி, அங்கு காங்கிரசின் சார்பாகப் போட்டியிட்ட முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிண்டர் சிங் என்பவரிடம் 102,770 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

captain-amarinder-singh

(அருண் ஜெட்லியைத் தோற்கடித்த அமரிண்டர் சிங்)

அமரிண்டர் சிங் பஞ்சாப் ராஜவம்சத்தின் வாரிசு என்பதும், பாரம்பரியமாக அமிர்தசரஸ் தொகுதியை அவர் தற்காத்து வந்திருக்கின்றார் என்பதும் ஜெட்லியின் தோல்விக்குக் காரணமாகக் கூறப்படும் காரணங்களாகும்.

இருப்பினும், இன்றைக்கு மோடி அமைக்கப்போகும் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சரவைப் பொறுப்புக்கு அருண் ஜெட்லியின் பெயர்தான் அடிபடுகின்றது.

வழக்கறிஞரான அருண் ஜெட்லியின் அழகாகவும், அற்புதமாகவும் வாதாடும் திறமையைக் கருத்தில் கொண்டு அவர் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும், நிதியமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் ஆரூடங்கள் கூறப்படுகின்றன.

பாஜகவின் மற்ற முக்கிய தலைவர்களில் சிலர் அத்வானியின் ஆதரவாளர்களாகப் பார்க்கப்படும் வேளையில், முழுக்க முழுக்க மோடியின் நம்பிக்கைக்குரிய நபராக பாஜகவில் உருவெடுத்திருப்பதாலும் – அவரது திறமைகளாலும்,

அமையவிருக்கும் மோடி அரசாங்கத்திலும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பாஜகவின் செயல்பாடுகளிலும் அருண் ஜெட்லி முக்கிய பங்கு வகிப்பார் என்பது உறுதி.

-இரா.முத்தரசன்