Home One Line P1 முன்னாள் இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

முன்னாள் இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

951
0
SHARE
Ad

புதுடில்லி – (மலேசிய நேரம் மாலை 5.00 மணி நிலவரம் – கூடுதல் தகவல்களுடன்) இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், நரேந்திர மோடியின் முதல் தவணை அமைச்சரவையில் அவருக்கு நெருங்கிய சகாவாகவும் திகழ்ந்த அருண் ஜெட்லி இன்று இங்குள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

அவருக்கு வயது 67. கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சனிக்கிழமை நண்பகல் 12.07 மணிக்கு காலமானார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சில மாதங்களாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த அருண் ஜெட்லி, நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலிலும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். எனினும் தொடர்ந்து நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நீடித்தார்.

#TamilSchoolmychoice

உடல்நலத்தைக் காரணம் காட்டி மோடியின் இரண்டாவது அமைச்சரவையிலும் இடம் பெறாமல் ஒதுங்கிக் கொண்டார். அமைச்சரவையில் இடம் பெறமாட்டேன் என அருண் ஜெட்லி பகிரங்க கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்ததைத் தொடர்ந்து மரபுகளை மீறி, நரேந்திர மோடி இரவோடு இரவாக அருண் ஜெட்லி வீட்டுக்கு வந்து அவரைச் சந்தித்தார்.

மோடியின் முதல் தவணை அமைச்சரவையில் மிக முக்கியமான அமைச்சராகப் பார்க்கப்பட்டாலும், சர்ச்சைக்குரிய பல முடிவுகளை அருண் ஜெட்லி எடுத்தார். ஒரே நாளில் இந்திய ரூபாயின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை மோடி எடுத்ததன் பின்னணியில் ஜெட்லியின் தலை உருண்டது. எனினும் இறுதிவரைத் தாக்குப்பிடித்து தான் செய்த முடிவு சரிதான் என்றும் அதனால் நிறைய பலன்கள் விளைந்தன என்றும் வாதிட்டார் ஜெட்லி.

ஜெட்லியின் நல்லுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை பாஜக தலைமையகத்திற்கு இறுதி மரியாதைக்காகக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அவரது இறுதிச் சடங்குகள் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது மதிப்புமிகு நண்பரை இழந்து விட்டேன் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.