புதுடில்லி – இன்று வியாழக்கிழமை இந்திய நேரப்படி காலை 11.00 மணியளவில் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்தியாவுக்கான வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக சமர்ப்பிக்கப்படும் கடைசி முழுமையான வரவு செலவுத் திட்டம் இதுவாதலால் நரேந்திர மோடியின் பாஜக அரசு பல்வேறு மக்கள் பயன் திட்டங்களை இணைத்து இந்த முக்கியமான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்திருக்கிறது.
குறிப்பாக விவசாயிகளுக்கு நலன் பயக்கும் திட்டங்களும் பொதுமக்களுக்கான சுகாதாரம், கல்வி போன்ற அம்சங்களை மேம்படுத்தும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
தற்போது உலகின் 7-வது மிகப் பெரிய பொருளாதார வல்லரசாகத் திகழும் இந்தியா கூடிய விரைவில் உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் எனவும் அருண் ஜெட்லி தனது நாடாளுமன்ற உரையில் தெரிவித்தார்.