Home நாடு சிகிச்சைப் பலனின்றி மாணவி வசந்தபிரியா மரணம்!

சிகிச்சைப் பலனின்றி மாணவி வசந்தபிரியா மரணம்!

1671
0
SHARE
Ad
LimvisitedVasanthapriya
கடந்த திங்கட்கிழமை பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், செபராங் ஜெயா மருத்துவமனையில் மாணவி வசந்தபிரியாவைப் பார்வையிட்டார்.

பட்டர்வர்த் – கடந்த வாரம், பினாங்கிலுள்ள பள்ளி ஒன்றில், ஆசிரியரின் ஐபோனைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 14 வயது மாணவி வசந்தபிரியா, தனது வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை முயற்சி செய்தார்.

எனினும், பெற்றோரால் உடனடியாகக் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூளைச்சாவடைந்த நிலையில், செயற்கை சுவாசக் கருவியின் மூலம் செபராங் ஜெயா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அம்மாணவி உயிரிழந்துவிட்டதாக மலேசியத் தமிழ் குரல் தலைவர் டேவிட் மார்ஷல் அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“இன்று காலை பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்” என்று டேவிட் மார்ஷல் கூறியதாக ‘தி ஸ்டார்’ இணையதளம் கூறுகின்றது.

நிபோங் தெபாலில் உள்ள எஸ்எம்கே மெத்தடிஸ்டு பள்ளியில் படித்து வந்த வசந்தபிரியாவை, கடந்த ஜனவரி 24-ம் தேதி, மதியம் 2 மணியளவில் 3 ஆசிரியர்கள் அழைத்து காணாமல் போன ஐபோன் குறித்து விசாரித்திருக்கின்றனர்.

40 வயதான ஆசிரியர் ஒருவர், வசந்தபிரியா தான் ஐபோனைத் திருடியதாகக் குற்றம் சுமத்தியதாக அதில் கூறப்பட்டிருக்கிறது.

தான் எடுக்கவில்லை என்று கூறியும், ஒரு ஆசிரியர் மாணவர்கள் முன்னிலையில் வசந்தபிரியாவை அடித்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.

அதன் பின்னர், ஆசிரியர்கள் அலுவலக வளாகத்தில் உள்ள தனி அறை ஒன்றில் வசந்தபிரியா உணவோ அல்லது கழிவறைக்கோச் செல்ல இயலாத படி சுமார் 5 மணி நேரம் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

மாலை 6.45 மணியளவில் ஐபோனைத் தொலைத்த ஆசிரியரின் கணவர், அப்பள்ளிக்கு வந்திருக்கிறார். பின்னர் ஆசிரியரும், அவரது கணவரும் சேர்ந்து வசந்தபிரியாவிடம் விசாரித்திருக்கின்றனர்.

ஐபோனைத் திருடியதை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் காவல்துறையை அழைக்கப்போவதாகவும் மிரட்டியிருக்கின்றனர்.

அதன் பின்னர், அவர்கள், வசந்தபிரியாவை அழைத்துக் கொண்டு, அவரது வீட்டிற்குச் சென்றிருக்கின்றனர்.

வீட்டை அடைந்தவுடன் வசந்தபிரியா தனது அறைக்குச் சென்று கதவைச் சாத்தியிருக்கிறார்.

வசந்தபிரியாவின் பெற்றோரும், குற்றம்சாட்டியவர்களும் வீட்டிலிருந்து வெளியேறி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, வசந்தபிரியா தனது அறையில் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்.

இரவு 8.20 மணியளவில் வீட்டிற்கு வந்த தந்தை, வசந்தபிரியாவை பலமுறை அழைத்துப் பார்த்தும் கதவைத் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வசந்தபிரியா தூக்கில் தொங்கிய நிலையில் சுயநினைவின்றி காணப்பட்டிருந்திருக்கிறார்.

உடனடியாக வசந்தபிரியாவை மீட்ட அவரது தந்தை, சுங்கை பாக்காப் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். அங்கிருந்து வசந்தபிரியா செப்ராங் ஜெயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.