ஜார்ஜ் டவுன் – கடந்த வாரம் பினாங்கில் உள்ள பள்ளி ஒன்றில், ஐபோன் திருடியதாக ஆசிரியர் தன்னைக் குற்றஞ்சாட்டியதால், 13 வயது மாணவி வசந்த பிரியா, தனது வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.
உடனடியாக, பெற்றோர்களால் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் வசந்த பிரியா, தற்போது முக்கிய உறுப்புகள் செயலிழந்து, சுயநினைவின்றி செயற்கை சுவாசக் கருவில் வைக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் நேற்று திங்கட்கிழமை, செபராங் ஜெயா மருத்துவமனையில் வசந்தபிரியாவைப் பார்வையிட்டார். அதன் பின்னர் அவரது பெற்றோரிடம் ஆறுதல் வார்த்தைகள் கூறி 1000 ரிங்கிட் பணத்தையும் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லிம், “இக்குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தையும், ஆறுதலையும் கூறிக் கொள்கிறேன். அழகான, பிரகாசமான இச்சிறுமையை இந்த நிலையில் பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருக்கின்றது.”
“இக்குடும்பம் இந்த துயரத்தை எதிர்க்கொள்ளும் வலிமையைப் பெறுவார்கள் என நம்புகிறேன். அவள் மீண்டும் நினைவு திரும்ப எனது பிரார்த்தனைகள். மருத்துவர்கள் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்துவிட்டார்கள். தற்போது அவர் செயற்கை சுவாசக் கருவியின் மூலம் சுவாசித்துக் கொண்டிருக்கிறார். நாம் கடவுளிடம் விட்டுவிடுவோம். அதைத் தவிர நம்மால் எதுவும் செய்ய முடியாது” என்று லிம் உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில், காவல்துறையினரும், கல்வி இலாகாவும் தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டுவருவார்கள் என தான் நம்புவதாகவும் லிம் தெரிவித்தார்.
வசந்தபிரியாவின் உறவினர்கள் பிறாய் காவல்நிலையத்தில் அளித்திருக்கும் புகாரின் படி, நிபோங் தெபாலில் உள்ள எஸ்எம்கே மெத்தடிஸ்டு பள்ளியில் படித்து வந்த வசந்தபிரியாவை, கடந்த வாரம் புதன்கிழமை மதியம் 2 மணியளவில் 3 ஆசிரியர்கள் அழைத்து காணாமல் போன ஐபோன் குறித்து விசாரித்திருக்கின்றனர்.
40 வயதான ஆசிரியர் ஒருவர், வசந்தபிரியா தான் ஐபோனைத் திருடியதாகக் குற்றம் சுமத்தியதாக அதில் கூறப்பட்டிருக்கிறது.
தான் எடுக்கவில்லை என்று கூறியும், ஒரு ஆசிரியர் மாணவர்கள் முன்னிலையில் வசந்தபிரியாவை அடித்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.
அதன் பின்னர், ஆசிரியர்கள் அலுவலக வளாகத்தில் உள்ள தனி அறை ஒன்றில் வசந்தபிரியா உணவோ அல்லது கழிவறைக்கோச் செல்ல இயலாத படி சுமார் 5 மணி நேரம் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
மாலை 6.45 மணியளவில் ஐபோனைத் தொலைத்த ஆசிரியரின் கணவர், அப்பள்ளிக்கு வந்திருக்கிறார். பின்னர் ஆசிரியரும், அவரது கணவரும் சேர்ந்து வசந்தபிரியாவிடம் விசாரித்திருக்கின்றனர்.
ஐபோனைத் திருடியதை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் காவல்துறையை அழைக்கப்போவதாகவும் மிரட்டியிருக்கின்றனர்.
அதன் பின்னர், அவர்கள், வசந்தபிரியாவை அழைத்துக் கொண்டு, அவரது வீட்டிற்குச் சென்றிருக்கின்றனர்.
வீட்டை அடைந்தவுடன் வசந்தபிரியா தனது அறைக்குச் சென்று கதவைச் சாத்தியிருக்கிறார்.
வசந்தபிரியாவின் பெற்றோரும், குற்றம்சாட்டியவர்களும் வீட்டிலிருந்து வெளியேறி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, வசந்தபிரியா தனது அறையில் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்.
இரவு 8.20 மணியளவில் வீட்டிற்கு வந்த தந்தை, வசந்தபிரியாவை பலமுறை அழைத்துப் பார்த்தும் கதவைத் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வசந்தபிரியா தூக்கில் தொங்கிய நிலையில் சுயநினைவின்றி காணப்பட்டிருந்திருக்கிறார்.
உடனடியாக வசந்தபிரியாவை மீட்ட அவரது தந்தை, சுங்கை பாக்காப் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். அங்கிருந்து வசந்தபிரியா செப்ராங் ஜெயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
படம்: நன்றி தமிழர் மீடியா