Home நாடு லங்காவியில் அமெரிக்க உளவாளியைச் சந்தித்தார் கிம் சோல் – நீதிமன்றத்தில் தகவல்!

லங்காவியில் அமெரிக்க உளவாளியைச் சந்தித்தார் கிம் சோல் – நீதிமன்றத்தில் தகவல்!

786
0
SHARE
Ad

kimjongnamகோலாலம்பூர் – வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் சோல், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, லங்காவியில் அமெரிக்க உளவாளி ஒருவரைச் சந்தித்ததாக உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டிருக்கிறது.

நேற்று திங்கட்கிழமை ஷா ஆலம் நீதிமன்றத்தில் இக்கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது எதிர்தரப்பு வழக்கறிஞர் கூய் சூன் செங், விசாரணை அதிகாரி துணைக் கண்காணிப்பாளர் வான் அசிருல் நிசாம் சே வான் அஜிசிடம் குறுக்கு விசாரணை நடத்திய போது, அமெரிக்க உளவாளியுடனான கிம் சோல் சந்திப்பு குறித்துக் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

இச்சந்திப்பு கடந்த 2017, பிப்ரவரி 9-ம் தேதி, லங்காவி தீவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சுமார் 2 மணி நேரங்கள் நீடித்தத்தாகவும் கூறினார்.

மேலும், கிம் சொல் கடந்த 2017, பிப்ரவரி 6-ம் தேதி, மலேசியாவுக்குள் நுழைந்ததாகவும், அமெரிக்க உளவாளி நாட்டில் இருப்பது காவல்துறைக்குத் தெரியும் என்றும் நீதிமன்றத்தில் கூறினார்.

ஆனால், சாட்சி அதனை மறுப்பதாகத் தெரிவித்தார்.

கிம் சோலுக்கும், அமெரிக்க உளவாளிக்கும் சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுவதை விசாரணை செய்ய தனது அதிகாரிகளை லங்காவிக்கு அனுப்பியதாகவும், ஆனால் அவர்களால் எந்த ஒரு ஆதாரமும் திரட்ட முடியவில்லை என்றும் ஏஎஸ்பி வான் அசிருல் விளக்கமளித்தார்.

எனினும், கிம் சோல் மரணத்தில் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது லங்காவிக்குச் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்ற கூயின் பரிந்துரையை அசிருல் ஏற்றார்.

எனினும், இந்த விவகாரத்தில், கூய் கூறுவது போல், தான் தகவல் எதையோ மறைப்பதாகக் கூறப்படுவதை அசிருல் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.

கடந்த 2017-ம் ஆண்டும் பிப்ரவரி 12-ம் தேதி, லங்காவியில் இருந்து கோலாலம்பூர் வந்தடைந்த கிம் சோல், அதற்கு மறுநாள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல் உள்ள புறப்பாடு அறையில், விஎக்ஸ் நெர்வ் ஏஜண்ட் என்ற இரசாயனம் கொண்டு முகத்தில் தேய்க்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், இந்தோனிசியாவைச் சேர்ந்த சித்தி ஆயிஷா (வயது 26), வியட்நாமைச் சேர்ந்த டோன் தி ஹுவாங் (வயது 29) ஆகியோருடன் 4 ஆடவர்களும், ஏஎஸ்பி வான் அசிருல் தலைமையிலான அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கிம் சோலைக் கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

இவ்வழக்கு விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை நீதிபதி அஸ்மி ஆரிபின் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.