அங்கரா, மே 30 – துருக்கியில், யூ-டியூப் (YouTube) இணையதளத்திற்கான தடையை நீக்க அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துருக்கியில் கடந்த மார்ச் மாதம், யூ-டியூப் (YouTube) இணையதளத்தில், அந்நாட்டு புலனாய்வுத்துறை தலைவர், அண்டை நாடான சிரியா மீது இராணுவத் தாக்குதல் நடத்துவது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சருடன் உரையாடுவது போன்ற காணொளி வெளியானது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ரெசிப் தயிப் எர்டோகன் யூ-டியூபினை தடை செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து யூ-டியூப் நிறுவனம் வழக்கு தொடுத்தது.
தற்போது அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில், “யூ-டியூப் இணையதளத்திற்கான தடை, தனிநபர் உரிமையை பறிக்கும் செயலாகும்” என்று கூறியுள்ளது. மேலும், இந்த தடையை நீக்குமாறு அந்நாட்டு தொலைதொடர்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
எனினும் இந்த தடை உடனடியாக நீக்கப்படுமா? என்பது இன்னும் உறுதியாகவில்லை. சர்ச்சையை ஏற்படுத்திய காணொளிக்காட்சிகள் இன்னும் அத்தளத்திலிருந்து நீக்கப்படவில்லை என அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதே போன்று கடந்த 2007-ம் ஆண்டும்,அந்நாட்டில் யூ-டியூப் இணையதளத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் அந்த தடை கடந்த 2010-ம் ஆண்டு நீக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.