கோலாலம்பூர், ஜூன் 1 –நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கை எதிர்நோக்கி வரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமின் புதல்வியுமான நூருல் இசா தனது இரண்டு குழந்தைகளும் தன்னுடைய பராமரிப்பில் இருந்து வர வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளார்.
கோலாலம்பூரிலுள்ள ஷரியா நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் 17ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
நூருல் இசாவின் கணவர் 35 வயதான ராஜா அஹ்மாட் ஷாரிர், நூருல் இசா மனு மீதான தனது நிலைப்பாட்டை அப்போது தெரிவிக்க வேண்டியிருக்கும்.
கடந்த மே 21ஆம் தேதி நூருல் இசாவின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த போது ஷரியா நீதிமன்றத்திற்கு நூருல் இசா நேரடியாக வந்திருந்தார். ஆனால், அவரது முன்னாள் கணவர் ராஜா அஹ்மாட் ஷாரிர் லண்டனில் இருப்பதால் வர இயலவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
34 வயதான நூருல் இசாவின் திருமணம் கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்றது. அவருக்கு 7 வயது மகள் ஒருவரும், 4 வயது மகன் ஒருவரும் இருக்கின்றார்கள்.
இதற்கிடையில், அந்த இருவருக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தைக்கு குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை எதிர்வரும் ஜூன் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கட்டத் தலைவராகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் பார்க்கப்படும் நூருல் இசா எதிர்வரும் பிகேஆர் கட்சித் தேர்தலில் தேசிய உதவித் தலைவருக்கு போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.