கோலாலம்பூர், ஜூன் 9 – கடந்த ஏப்ரல் மாதத்தில், மக்களால் அதிகம் பார்வையிடப்பட்ட செய்தி இணையத்தளமாக ‘தி ஸ்டார் ஆன்லைன்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மலேசியன் டிஜிட்டல் அசோசியேஷன் (Malaysian Digital Association – MDA) நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் ஏப்ரல் மாத அறிக்கையின் படி, மக்களால் அதிகம் பார்வையிடப்பட்ட மலேசியாவிலுள்ள செய்தி இணையத்தளத்தளங்களில் ‘தி ஸ்டார் ஆன் லைன்’ இணையத்தளத்திற்கு முதல் இடமும், மொத்தமுள்ள 30 உள்நாட்டு இணையத்தளங்களில் 5 வது இடமும் கிடைத்துள்ளது.
இதன் மூலம் ‘தி ஸ்டார் ஆன் லைன்’ இணையத்தளம் மலேசியாகினி இணையத்தளத்தை முந்தி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
தி ஸ்டார் இணையத்தளம் 971,000 தனிப்பட்ட பார்வையாளர்களை பெற்று முதல் இடத்தையும், மலேசியாகினி இணையத்தளம் 897,000 தனிப்பட்ட பார்வையாளர்களை பெற்று இரண்டாவது இடத்தையும், தி மலேசியன் இன்சைடர் 789,000 பார்வையாளர்களைப் பெற்று 9 வது இடத்தையும், தி மலாய் மெயில் இணையத்தளம் 318,000 பார்வையாளர்களைப் பெற்று கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.
மலேசியாவில் உள்ள இணையத்தளங்களை மக்கள் எந்த அளவிற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை கணக்கிடும் அமைப்பாக இந்த மலேசியன் டிஜிட்டல் அசோசியேஷன் நிறுவனம் கடந்த 2009 -ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது.
ஏப்ரல் மாதத்தில் மலேசியாவில் உள்ள மொத்தம் 30 உள்ளூர் இணையத்தளங்களில் மக்களால் அதிகம் பார்வையிடப்பட்டதில் மலாயா வங்கியின் www.maybank2u.com.my இணையத்தளம் முதல் இடத்தையும், மூடா.காம் (Mudah.my) இரண்டாவது இடத்தையும், சிம்ப்கிளிக்ஸ் ( cimbclicks.com.my) மூன்றாவது இடத்தையும், ஏர்ஏசியாவின் (Airasia.com) நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.