Home நாடு சுல்தானுக்கு நிர்வாக அதிகாரங்கள் வழங்கும் சர்ச்சைக்குரிய ஜோகூர் சட்டமன்ற மசோதா மாற்றங்களுடன் தாக்கல்!

சுல்தானுக்கு நிர்வாக அதிகாரங்கள் வழங்கும் சர்ச்சைக்குரிய ஜோகூர் சட்டமன்ற மசோதா மாற்றங்களுடன் தாக்கல்!

635
0
SHARE
Ad

Johor-Sultan-300-x-200ஜோகூர்பாரு, ஜூன் 9 – ஜோகூர் சுல்தானுக்கு மாநில நிர்வாகத்தில் அதிகாரங்கள் வழங்கும் சர்ச்சைக்குரிய மசோதா இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் திருத்தங்களுடன் முன்மொழியப்பட்டது.

சில மாற்றங்களுடன் சமர்ப்பிக்கப்படும் ஜோகூர், வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் அமைப்பது தொடர்பான இந்த சட்ட மசோதாவில் ஜோகூர் சுல்தானுக்கு நிர்வாக அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருந்ததால் நாடு முழுவதிலும் அரசியல்வாதிகளிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும், சட்ட வல்லுநர்களிடமிருந்தும் பலத்த கண்டனங்கள் எழுந்தன.

மலேசிய அரசியல் சாசனத்திற்கு எதிரான சட்ட மசோதா இது என்றும் மலேசியாவில் நடப்பில் இருந்து வரும் ஜனநாயக அரசமைப்பு பாணியிலான அரசியல் அமைப்பையே நிர்மூலமாக்கும் சட்ட மசோதா இது என்றும் வலுவான எதிர்ப்புகள் எழுந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மற்றும் முன்னாள் துணைப் பிரதமரும் ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்தவருமான துன் மூசா ஹீத்தாமும் இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக அறைகூவல் விடுத்திருந்தனர்.

இதன் காரணமாக அமைக்கப்படவிருக்கும் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்தில் இனி சுல்தானின் நேரடி தலையீடு இருக்காது என்ற வகையில் அந்த சட்ட மசோதா திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சுல்தான், மாநில மந்திரி புசாரின் ஆலோசனையின்படி அந்த நியமனங்களை செய்வார் என்று அந்த சட்ட மசோதா திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நேரடியாக சுல்தான் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக மாநில நிர்வாகம் என்ற வாசகம் இடம்பெறும்.

ஜோகூர் சுல்தான் நேரடியாகவே மாநிலத்தில் வர்த்தகங்களிலும் குறிப்பாக நில மேம்பாட்டுத் திட்டங்களிலும் ஈடுபட்டு வருவதால் இந்த சட்ட மசோதாவின் மூலம் மாநில நிர்வாகத்தில் அவரது பங்கும் சர்ச்சைக்குரியதாகி விடும் என்றும் தனிப்பட்ட நலன்கள் மீதான முரண்பாடுகள் ஏற்படும் எனவும் சட்டவல்லுநர்கள் இதுகுறித்து எச்சரிக்கை தெரிவித்திருந்தனர்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதால், இதன்மூலம் ஜோகூர் சுல்தான் மாநில நேரடி நிர்வாகத்தில் தலையிடக் கூடும் என்ற அச்சத்திற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.