கோலாலம்பூர், ஜூன் 10 – பொதுவாகவே காற்பந்து போட்டிகளில் கள்ள சூதாட்டம் பின்னணியில் பெருமளவில் நடைபெறுவது அனைவரும் அறிந்ததுதான்.
அதிலும், உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் என்றால் கள்ள சூதாட்டம் அமோகமான அளவில் நடைபெறும்.
சில நாடுகளில் அதிகாரபூர்வ சூதாட்டம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மலேசியா போன்ற நாடுகளில் கள்ளத்தனமான சூதாட்டம் நடத்தப்பட்டு வந்துள்ளது.
ஆனால், உலகக் கிண்ண காற்பந்தாட்டத்தின் போது கள்ள சூதாட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி (படம்) எச்சரித்துள்ளார்.
உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் போது இணையம் வழியான சூதாட்டத்தை கண்காணிப்பதற்கு மலேசிய காவல் துறையின் தடயவியல் நிபுணர்கள் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் உதவியை நாடியிருப்பதாக அவர் சொன்னார்.
“கால்பந்தாட்டத்தின் போது விளையாட்டுகளைக் கண்டு மகிழ்ச்சி அடையுங்கள். உங்களது பணத்தில் விளையாட்டை வைத்து சூதாடாதீர்கள்” என்றும் அமைச்சர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
பொது பாதுகாப்பு கருதி, அனைத்துலக சூதாட்ட கும்பலின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு அனைத்துலக காவல் துறை, மற்றும் உலகக் காற்பந்து அமைப்பான பிஃபா மற்றும் பல அமைப்புகளிடமிருந்து மலேசியக் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு கிடைத்திருப்பதாகவும் ஹமிடி சொன்னார்.
பிரேசிலில் வெள்ளிக்கிழமையன்று தொடங்கும் 2014ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டி ஜூலை 14ஆம் தேதி முடிவுறும்.
பண மோசடி சட்டம், பயங்கரவாத நிதியளிப்புக்கு எதிரான சட்டம், பொது சூதாட்ட விளையாட்டுச் சட்டம், 1948ஆம் ஆண்டு பல்லூடகச் சட்டம் போன்ற பல சட்டங்களின் கீழ் மலேசியக் காவல் துறை அதிகாரிகள் உலகக் கிண்ண காற்பந்தாட்டப் போட்டிகளின் மீது தங்களின் கண்காணிப்பை மேற்கொண்டு வருவார்கள்.
போட்டிகள் அதிகாரபூர்வமாகத் தொடங்குவதற்கு முன்பாகவே, பூர்வாங்க விசாரணைகளை மலேசியக் காவல் துறை மேற்கொண்டு வருவதாகவும் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.