இது குறித்து அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகைக்கு அளித்துள்ள தகவலின் படி, “மொஸில்லா நிறுவனம் இந்தியா மற்றும் இந்தோனேசிய பயனர்களுக்காக முதன்முறையாக மிகக் குறைந்த விலையில், மொஸில்லா இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட திறன்பேசிகளை உருவாக்கி வருகின்றது. இதற்காக இரண்டு இந்திய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தத்தில் மொஸில்லா ஈடுபட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வரும் மொஸில்லா நிறுவனம், தற்போது ZTE Corp மற்றும் LG Electronics உட்பட நான்கு நிறுவனங்களுடன் இணைந்து ஐரோப்பா மற்றும் லத்தின் அமெரிக்காவிற்கு திறன்பேசிகளை வெற்றிகரமாக தயாரித்து வருகின்றது. இதன் விலை 60 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
எனினும், நடுத்தர குடும்பங்கள் அதிகம் வசிக்கும் இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இதன் விற்பனை மந்தமாகவே உள்ளது. மேலும், இதனை இணைய வர்த்தகத்தில் மட்டுமே பெற முடியும். எனவே, மொஸில்லா நிறுவனம், அத்தகைய பயனர்களுக்காக பிரத்யேகமாக 25 அமெரிக்க டாலர்கள் என்ற விலையில் இந்த திறன்பேசிகளை உருவாக்கி வருவதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் ஜூலை மாதம் மொஸில்லாவின் திறன்பேசிகள், இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.