மும்பை, ஜூன் 11 – இந்தியாவில் விமான நிறுவனம் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள ஏர் ஆசியா (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நாளை முதல் தனது சேவையை வழங்குகிறது.
முதன் முதலாக இந்தியாவின் டாடா நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் ஏர் ஆசியா தனது முதல் பயணமான பெங்களூருவிலிருந்து கோவாவிற்கு நாளை வியாழக்கிழமை இந்திய நேரப்படி மாலை 3.10 மணியளவில் அந்தப் பயணத்தை மேற்கொள்கிறது.
மலிவு விமானமான ஏர் ஆசியா மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் செயல்பட்ட போதிலும் தற்போது அது முதன் முதலாக இந்தியாவில் கால் பதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
80 கோடி ரூபாய் (ஏறத்தாழ 14.5 மில்லியன் அமெரிக்க வெள்ளி) ஆரம்ப முதலீட்டை கொண்டுள்ள ஏர் ஆசியா, மற்ற இந்திய உள்நாட்டு நிறுவனங்களான ஜெட் ஏர்வேய்ஸ், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, கோ ஏர் மற்றும் ஏர் இந்தியா போன்ற நிறுவனங்களுடன் போட்டியில் ஈடுபடும்.
இதன்மூலம் குறைந்த கட்டண விமானச் சேவை வழங்கும் நான்காவது நிறுவனமாக ஏர்ஏசியா இந்தியா உள்நாட்டு விமானமாக உருவெடுத்துள்ளது.