நாடாளுமன்றஅவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது புதன்கிழமை 2-ஆவது நாளாக விவாதம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துப் பேசினார். நாடாளுமன்றத்தில் தனது முதல் பேச்சாக அமைந்த அந்த பதிலுரையில், பிரதமர் மோடி கூறியதாவது,
“நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு எனது அரசு செயல்படும். 2022-ஆம் ஆண்டில், நாடு 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதிகளுடன் கூடிய வீடு இல்லாதவர்கள் நாட்டில் யாருமில்லை என்ற நிலையை எனது அரசு உறுதி செய்யும்.
ஒரு நாட்டின் அரசு, யாருக்காக பணியாற்ற வேண்டும்? படித்தவர்கள் அல்லது சிலருக்காக (பணக்காரர்கள்) பணியாற்ற வேண்டுமா? அரசு என்பது, ஏழைகளுக்காகத்தான். நாட்டில் வறுமையை ஒழிக்க எனது அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்காக ஏழைகளுக்கு படிப்பறிவை ஏற்படுத்தி தைரியத்தை தரும்.
இவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் ஏழ்மை நிலைக்கு எதிராக தாங்களே போராடி, அதிலிருந்து வெளியே வருவார்கள். ஏழ்மை நிலையில் இருந்து ஏழை மக்களை மீட்டு எடுப்பதில் நாம் வெற்றி பெற்றால், யாரையும் சார்ந்திருக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இருக்காது. ஏழைகளுக்காக நாம் பணியாற்றவில்லை என்றால், மக்கள் ஒருபோதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
மகளிருக்கு மரியாதை மற்றும் பாதுகாப்பு அளிப்பதே தலையாய குறிக்கோளாகும். உத்தரப் பிரதேசத்தில் பதாயூன் உள்ளிட்ட இடங்களில் மகளிர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற வன்முறையை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பாஜக கர்வத்துடன் நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுக்கிறேன். தேர்தல் வெற்றி, எங்களுக்கு பாடங்களையும், பணிவையும் கற்பித்துள்ளது. அரசு குறித்த விமர்சனங்களை வரவேற்கிறேன். அப்போதுதான் அரசு கர்வத்துடன் நடந்து கொள்வதிலிருந்து காக்க முடியும்.
கடந்த கால கசப்புகளை எதிர்கட்சியினர் மறக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். எங்களால் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் இந்தப் பணியில் நீங்களும் (எதிர்க்கட்சிகள்) பங்கேற்க வேண்டும் என விரும்புகிறேன். உங்களை விட்டு விட்டுச் செல்ல விரும்பவில்லை.
மகாபாரதத்தில் எண்ணிக்கையில் குறைவாக உள்ள பாண்டவர்கள், எண்ணிக்கையில் அதிகமிருந்த கௌரவர்களை தோற்கடித்ததாக இங்குள்ளவர்களால் தெரிவிக்கப்பட்டது (காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்ததை குறிப்பிட்டார்).
துரியோதனன் தனக்கு எது தர்மம், எது உண்மை என்பது தெரியும் என்றும், ஆனால் அதன்படி நடக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார். அதுபோல் அவர்களுக்கும் (காங்கிரஸ்) எது நல்ல செயல் என்பது தெரியும். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. அதனை நாங்கள் செய்யப் போகிறோம்.
மகாபாரத காலம் முடிந்து விட்டது. இங்கு யாரும், கௌரவர்களோ அல்லது பாண்டவர்களோ அல்ல. எனது அரசு வளர்ச்சிப் பணியில் அனைவரையும் உடன் அழைத்து செல்லவே விரும்புகிறது. உடலில் உள்ள ஓரு உறுப்பு மட்டும் பலவீனமாக இருந்தாலும், உடல் முழு ஆரோக்கியத்துடன் இல்லை என்பதில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.
ஆதலால் முஸ்லிம்கள் உள்பட அனைத்து தரப்பினரின் வளர்ச்சிக்காகவும் எனது அரசு பாடுபடும். இதற்காக எனது அரசு உறுதி பூண்டுள்ளது. இதனை திருப்திபடுத்தும் நடவடிக்கையாக நாங்கள் பார்க்கவில்லை.
நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்பதும், ஊழல் இந்தியா என்று நாட்டுக்கு ஏற்பட்டுள்ள தோற்றத்தை கூட்டுறவு கூட்டாட்சி மூலம் “திறமைமிக்க இந்தியா’ என்ற தோற்றமாக மாற்ற வேண்டும் என்பதுமே எனது லட்சியமாகும்.
“கனவு காணுங்கள், அந்தக் கனவை நனவாக்குவதற்கு பாடுபடுங்கள்’ என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். எங்களது கனவை நிறைவேற்றுவது கடினம்தான். ஆனால் உங்களது (எதிர்க்கட்சிகள்) ஒத்துழைப்பு இருந்தால், அதனை நிச்சயம் நிறைவேற்ற முடியும்.
மாநிலங்களை பொருத்தவரை, மத்திய அரசு பெரிய அண்ணன் மனோபாவத்துடன் நடப்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. “கூட்டுறவு கூட்டாட்சி’ என்பதில்தான் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்.
குடியரசுத் தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்துவோம். எந்தவொரு திட்டத்தையும் கைவிட மாட்டோம். நாட்டில் பல்வேறு பிரிவினரும் இன்னும் வளர்ச்சியடையாமல், பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளிட்டோரின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு எந்த அரசும் முயற்சிக்கவில்லை என நான் குற்றம்சாட்டவில்லை. அதற்கான நிதி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் மாற்றம்தான் ஏற்படவில்லை.
விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக விவசாய பொருள்களின் உற்பத்தித்திறன், நவீன உத்தி மூலம் மேம்படுத்தப்படும். நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும், குடிநீர், மின்சாரம், கழிவறை வசதியுடன் கூடிய வீடு அளிப்பதே எனது அரசின் தலையாய குறிக்கோளாகும். யாரும் பசியுடன் படுக்கைக்கு உறங்கச் செல்லக்கூடாது என்பதே எனது அரசின் இலக்காகும். இந்த குறிக்கோளை நிச்சயம் நிறைவேற்றுவோம்” என்று மோடி தெரிவித்தார்.