கோலாலம்பூர், ஜூன் 25 – டிஸ்கவரி தொலைக்காட்சியின், ‘நிர்வாணம் மற்றும் பயம்’ (Naked and Afraid) என்ற நிகழ்ச்சியில் இடம் பெற்ற, ‘தி பெயின் ஃபாரஸ்ட்’ என்ற அத்தியாயம் (episode) கடந்த ஏப்ரல் 13 -ம் தேதி அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டது.
அந்த அத்தியாயத்தில் எடுக்கப்பட்டிருக்கும் ஆண், பெண் நிர்வாணக் காட்சிகள் அனைத்தும் மலேசியாவில் பேராக் மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
(யுடியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் படத்தின் காட்சி)
இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் மட்டும் ஒளிபரப்பப்பட்டாலும், யூடியூப் இணையத்தளத்தில் அதனுடைய விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது அத்தியாயம் நேற்று முன்தினம் ஜூன் 23 -ம் தேதி வெளியிடப்பட்டது.
முதல் அத்தியாயத்தின் நிர்வாணக் காட்சிகள் அனைத்தும் சபா, சரவாக் மாநிலங்களிலும் (போர்னியோ தீவுகள்), இரண்டாவது அத்தியாயம் பேராக் மாநிலத்தில் உள்ள ராயல் பெலும் காட்டிலும் படமாக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. காரணம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த படகு ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரமாக பிரபல சின்னம் ஒன்று இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
(படத்தின் காட்சி ஒன்றில் பயன்படுத்தப்பட்டிருக்கும் படகு)
‘ரியாலிட்டி ஷோ’ என்று அழைக்கப்படும் அந்த உண்மை நிகழ்ச்சியில், காட்டில் முதன் முதலாக சந்தித்துக் கொள்ளும் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகிய மூவரும் 21 நாட்கள் அக்காட்டிலேயே ஒன்றாக வசிக்கவேண்டும். தாங்களே தங்களது உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடத்தை தேடிக் கொள்ள வேண்டும்.
தற்போது இந்த விவகாரத்தை, நாட்டின் முன்னணி ஆங்கில இணைய செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளதோடு, மலேசியாவில் இது போன்ற நிர்வாணப் படங்கள் எடுக்க அனுமதி அளிக்கலாமா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.