நியூயார்க், ஜூன் 26 – இலங்கை அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய உள்நாட்டு போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐ.நா.சபை, 3 பேர் கொண்ட வல்லுநர் குழு ஒன்றினை அமைத்துள்ளது. .
இந்த வல்லுநர் குழுவில் பின்லாந்து முன்னாள் அதிபரும் நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்டி அடிசாரி, நியூசிலாந்து முன்னாள் ஆளுநர் சில்வியா கார்ட்ரைட், பாகிஸ்தான் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் அஸ்மா ஜகாங்கீர் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அறிவித்துள்ளார்.
இது குறித்து நவநீதம் பிள்ளை கூறுகையில், “இலங்கை வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த விசாரணைக்கு உதவி செய்ய இந்த மூன்று வல்லுநர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில், அந்நாட்டு இராணுவமும், விடுதலைப் புலிகளும் எத்தகைய மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டன என்பது குறித்து இந்த குழு விசாரணை நடத்தும் என்றும், இதன் முடிவு 10 மாதங்களில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.