சான் பிரான்சிஸ்கோ, ஜூன் 26 – உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், பயனர்கள் ஓட்டும் கார்கள் முதல் கைகளில் அணியும் கைக்கடிகாரம் வரை தனது முத்திரையை பதிக்க விரும்புகின்றது. அதனை கருத்தில் கொண்டு நேற்று தொடங்கிய கூகுள் மென்பொருள் மேம்பாட்டாளர்கள் மாநாட்டில், எதிர்கால தொழில்நுட்பங்கள் பற்றிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது.
இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் (Internet Of Things)
பயனர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருட்களில் இணையத்தை புகுத்த முனைப்பு காட்டி வரும் கூகுள், அதற்காக நெஸ்ட் லேப் எனும் வெப்ப சீர்நிலைக் கருவிகளை தயாரிக்கும் நிறுவனத்தை, 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் என்ற இந்த தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆப்பிளுக்கு போட்டியாக கூகுள் செயல்பட்டு வருகின்றது.
அண்டிரோய்டு எல் (Android L)
கூகுளின் இயங்குதளமான ஆண்டிராய்டில், புதிய பதிப்பாக உருவாகி வரும் ஆண்டிராய்டு எல் பல்வேறு சிறப்பான வசதிகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகின்றது. அவற்றில் மிக முக்கிய வசதியாக உருவாகி வரும் கில்லெர் ஸ்விட்ச் செயல்முறையானது, திறன்பேசிகள் களவு போகும் பொழுது, தொலைவில் இருந்து அதனை செயல் இழக்கச் செய்யும் முறையாகும்.
அண்டிரோய்டு ஆட்டோ (Android Auto)
பயனர்களின் கார்கள் போன்ற வாகனங்களில் அடிப்படை தொழில்நுட்ப தேவைகளான ஜிபிஎஸ், மேப் மற்றும் ஒலி ஒளி அமைப்புகளின் இயக்கம் ஆகியவற்றினை திறன்பேசிகள் மூலமாகவோ அல்லது ஒலித் துணுக்குகள் மூலமாக இயக்க, கூகுள் இந்த ஆண்டிராய்டு ஆட்டோ தொழில்நுட்பத்தினை செயல்படுத்தி வருகின்றது.
வோல்டா செயல் திட்டம் (Project Volta)
ஆண்டிராய்டு சாதனங்களின் மின்சேமிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் கூகுள் வோல்டா என்ற பெயரில் புதிய செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி வருகின்றது.
நவீன மயமாகி வரும் உலகத்தை கூகுள் மயமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள கூகுள், தாங்கள் உருவாக்கி வரும் பல்வேறு புதிய தொழில்நுட்ப திட்டங்கள் குறித்த அறிமுகத்தை கூகுள் ஐ ஒ மாநாட்டில் எடுத்துரைத்து வருகின்றது.
படம்: EPA