கான்பெரா : செய்தி ஊடகங்களில் இருந்து பெறும் தகவல்களுக்கு கூகுள் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இதன் மூலம் நலிவடைந்து வரும் ஊடகத் துறைக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் நோக்கமாகும்.
ஆனால், இதற்கு கூகுள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தவிருக்கும் சட்டத்தின் வரைவு (டிராப்ட்) மாதிரி ஒன்றை ஆஸ்திரேலியா நாடாளுமன்ற செனட் குழு விவாதித்தபோது, அதில் கலந்து கொண்ட கூகுள் பிரதிநிதி புதிய சட்டத்திற்கு கூகுளின் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
இந்த நகல் சட்டம் நடைமுறையில் செயல்பட முடியாது என்றும் அப்படியே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அமுல்படுத்தப்பட்டால், ஆஸ்திரேலியாவில் தங்களின் கூகுள் தேடுதல் இயந்திரத்தை (Google search engine) மூடுவதைத் தவிரத் தங்களுக்கு வேறு வழியில்லை என ஆஸ்திரேலியாவின் கூகுள் பிரிவின் நிர்வாக இயக்குநர் மெல் சில்வா நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தார்.
“இது எங்களுக்கு மட்டும் பாதிப்பல்ல. ஆஸ்திரேலியாவின் மில்லியன் கணக்கான பயனர்களும், சிறுதொழில் புரிபவர்களும், ஊடகத்தினரும், பாதிப்படைவர்” என மெல் சில்வா மேலும் கூறினார்.