சிலாங்கூர், ஜூன் 26 – கோல சிலாங்கூர் பிகேஆர் தொகுதி தலைவர் பதவிக்கான தேர்தலில், சிலாங்கூர் மந்திரி பெசார் அப்துல் காலிட் இப்ராகிமை, முன்னாள் காப்பார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.மாணிக்கவாசகம் தோற்கடித்துள்ளார்.
பிகேஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலியின் உதவியாளரான ஹில்மான் இடாம் கூறுகையில், இந்த தேர்தலில் காலிட் 515 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளதாகவும், மாணிக்கவாசகம் 701 வாக்குகள் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், கோல சிலாங்கூர் தொகுதியில், தேசிய துணைத்தலைவருக்கான போட்டியில் நடப்பு துணைத்தலைவரான அஸ்மின் அலியை விட காலிட் அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.
அஸ்மின் அலி 440 வாக்குகளும், டத்தோ சைஃபுடின் நாசுசன் 50 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
பிகேஆர் தேர்தலில் காலிட் இப்ராகிம் பண அரசியல் செய்தார் என மாணிக்கவாசகம் பொதுவில் குற்றம் சாட்டியதால் அண்மையில் சில வாரங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் மாணிக்கவாசகத்திற்கு காரணம் கோரும் கடிதம் வழங்கப்பட்டு, அதற்கு அவர் சரியான காரணங்களை சொல்லி பதில் வழங்கியதால் அவருடைய காரணத்தை ஏற்றுக் கொண்டு அவரது இடைநீக்கத்தை மீட்டுக் கொள்வதாக பிகேஆர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.