கோலாலம்பூர், ஜூன் 26 – மாணவர் ஒருவருக்கு எச்ஐவி நோய் வந்த காரணத்தால், அவரது டிப்ளோமாவை உயர் கல்வி நிறுவனம் ஒன்று நிறுத்தி வைத்ததாக மலேசியன் எய்ட்ஸ் கவுன்சில் (எம்ஏசி) தெரிவித்துள்ளது.
உயர் கல்வித்துறையின் துணையமைச்சர் சைபுடின் அப்துல்லாவின் தலையீட்டிற்கு பின்னரே அம்மாணவருக்கு டிப்ளோ பட்டம் வழங்கப்பட்டது என்றும் எம்ஏசி குறிப்பிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட உயர் கல்வி நிறுவனம், 23 வயதான அம்மாணவரை, தனக்கு எதன் மூலமாக எச்ஐவி நோய் தொற்று ஏற்பட்டது என்பதை அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டதாக எச்ஐவி மற்றும் மனித உரிமைகளுக்கான மேல்முறையீட்டு அறிக்கை 2013 கூறுகின்றது.
இது குறித்து எஃப்எஃப் என்று மட்டும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்த மாணவர் கூறுகையில், “எனக்கு எப்படி எச்ஐவி நோய் வந்தது. யாரெல்லாம் என்னுடன் விடுதி அறையில் தங்கியிருந்தார்கள். எச்ஐவி வருவதற்கு நான் என்னவெல்லாம் தகாத நடத்தைகளை செய்தேன் என்று கல்வி நிறுவனத்தின் தலைவர் கடிதம் எழுதித்தர சொன்னார். அப்படி நான் செய்யவில்லை என்றால், என்னுடைய பட்டமளிப்பை நிறுத்துவதாகவும் கல்வி நிறுவனம் கூறியது” என்று தெரிவித்தார்.
அதேவேளையில், எச்ஐவி நோய் உள்ளவர்கள் கல்வி உதவித்தொகையை பெற முடியாது என்று பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இவ்வாறு நோய் குறித்து அறிவிப்பதன் மூலம் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும் என்று அமைச்சரவை அதிகாரிகள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“புற்றுநோய் போன்ற பெரிய வியாதிகளுக்குத் தேவையான விலையுயர்ந்த மருந்துகள், வெளிநாட்டு மாணவர்களுக்கு 6 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த மருந்துகள் எச்ஐவி நோய்க்கு தரப்படுவதில்லை” என்று எம்ஏசி கூறியுள்ளது.
பல்கலைக்கழங்களிலும், கல்வி உதவித்தொகை விண்ணப்ப பாரங்களிலும் எச்ஐவி நோய் குறித்து அறிவிக்கும் முறையை நீக்க வேண்டும் என்று துணை கல்வியமைச்சர் பி.கமலநாதனிடம் தொடர்ந்து கூறி வருவதாகவும் எம்ஏசி தெரிவித்துள்ளது.