கோத்தா பாரு – கிளந்தான் மாநிலத்தில் முறையற்ற உடலுறவு மற்றும் ஓரினச்சேர்க்கை காரணமாக எச்ஐவி தொற்று அதிகரித்து வருவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அம்மாநில அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறது புத்ராஜெயா.
இது குறித்து ஊரக மற்றும் வட்டார மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோ அகமட் ஜஸ்லான் யாக்கோப் கூறுகையில், கிளந்தான் மாநில அரசு இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், மாறாக, இதனை கூட்டரசு அரசாங்கத்தின் கைகளில் விட்டுவிடக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.
“அதிகரித்து வரும் சம்பவங்கள் மிகவும் கவலைப்பட வேண்டிய ஒன்று. ஒருவருக்குப் பயன்படுத்தப்பட்ட ஊசியை மற்றவருடன் பகிர்வதால் தான் எச்ஐவி பரவுகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் திடீரென இது (உடலுறவு மூலம் பரவுதல்) அதிகரித்திருக்கிறது.”
“கிளந்தான் என்பது ‘மக்காவின் நுழைவு வாயில்’ ஆக இருக்க வேண்டும். மாநிலத் தலைவர்கள் அனைவரும் உலாமாவாக இருக்கிறார்கள். எனவே இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது” என்று அகமட் ஜஸ்லான் யாக்கோப் செய்தியாளர்களிடம் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.