கிள்ளான், ஜூன் 30 – நாடெங்கிலும் நிலவி வரும் வறண்ட வானிலையின் காரணமாக, தர்பூசணியின் விலை 40% அதிகரித்துள்ளது. உயர் தரம் கொண்ட தர்பூசணி கிலோ ஒன்றுக்கு 1.10 ரிங்கெட்டுக்கு விற்கப்பட்ட நிலைமாறி தற்பொழுது 1.30 முதல் 1.40 ரிங்கிட் வரை விற்கப்படுகின்றது.
கடுமையான வெயிலால் ஏற்படும் தாகத்தின் காரணமாக, விலை உயர்வை கூட கவனிக்காமல் நிறைய வாடிக்கையாளர்கள் தர்பூசணியை வாங்குகின்றார்கள்.
இது குறித்து பழவிற்பனையாளர்களுள் ஒருவரான தியோ சின் கியோ கூறுகையில், “எனக்கும் அதிக வெப்பம் நல்லதாகப் படவில்லை. பேராக் மற்றும் கெடா மாநிலங்களிலுள்ள தோட்டங்களிலிருந்து அதிக அளவிலான பழங்களை தினமும் விநியோகம் செய்யுமாறு தெரிவித்திருக்கின்றேன்” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாக ஸ்டார் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், பழம் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை எண்ணி தான் மகிழ்ச்சிஅடைவதாகவும், அன்றாடம் காலையில் 8 மணிக்கு தனது 15 வேலையாட்களைக் கொண்டு தர்பூசணிப்பழங்களை அதன் தரத்திற்கு ஏற்ப பிரிப்பதாகவும் ஜாலான் லண்டாசன் அருகே கடை வைத்துள்ள 47 வயதான தியோ கூறியுள்ளார்.
நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் அதிக வெப்பநிலையின் காரணமாக தியொவின் கடையில் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் வந்து பழங்கள் வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.