கோலாலம்பூர், ஜூன் 30 – நேற்று முதல் நாடெங்கிலும் புனித இரமலான் நோன்பு துவங்கியுள்ளதால், இஸ்லாமியர்கள் நோன்பு காலங்களில் அதிகாலையில் பழச்சாறு குடிப்பது உடல் ஆரோக்கியம் மற்றும் அன்றைய நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கும் உதவுவதாக உணவுத்துறை நிபுணர்கள் அறிவுருத்தியுள்ளனர்.
இது குறித்து உணவுத்துறை நிபுணர் மற்றும் கோலாலம்பூர் மருத்துவமனை கேட்டரிங் (எஸ்கேஎல்) தலைவர் ரிட்ஸோனி சுலைமான் கூறுகையில், “பழச்சாறு அருந்துதல் உடலில் நீர்சக்தியை அதிகரிக்கும்.காரணம் பழச்சாறில் பொட்டசியம் மற்றும் குளுக்கோஸ் போன்ற நீர்சக்தியை அதிகரிக்க கூடிய பல வைட்டமின்கள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நோன்பு காலங்களில் காபி மற்றும் தேநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், அது சிறுநீர் பிரிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும் என்றும் ரிட்ஸோனி கூறியுள்ளார்.
இதனிடையே, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் (யுஎஸ்எம்) சுகாதர அறிவியல் துறையின் தலைவர் முகாமட் ஹைரில் நிஜாம் அப்துல் ஹமிட்கூறுகையில், “வெயில் காலங்களிலும் இரமலான் காலங்களிலும் போதுமான தண்ணீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 குவளை நீர் அருந்த வேண்டும். உடலில் நீரின் பற்றாக்குறையினால் சிறுநீரக பிரச்சனை மற்றும் மயக்கம் ஏற்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.