ஜூலை 01 – கூகுள் நிறுவனம் தனது முதல் சமூக ஊடகமான ‘ஆர்குட்’ (Orkut) -ன் சேவையை செப்டம்பர் 30 -ம் தேதி முதல் நிறுத்திக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட ஆர்குட் இணையத்தளம், முதலில் இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் மட்டுமே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் ஆர்குட் பல்வேறு மக்களை மொழி, நாடுகள் கடந்து தொடர்பு கொள்ள வைத்தது.
அதே வருடத்தில் (2004) நட்பு ஊடகமான ‘பேஸ்புக்'(Facebook) உருவான போது, ஆர்குட்டில் இருந்த பலர் பேஸ்புக்கின் சேவைகளை கண்டு வியந்து அதில் கணக்குகளை திறக்கத் தொடங்கினார்.
அதன் பின்னர், இன்று வரை நட்பு ஊடகங்களில் பேஸ்புக் மட்டுமே முதன்மையாக இருந்து வருகின்றது.
இந்நிலையில், ஆர்குட் சேவையை நிறுத்துவது பற்றி கூகுள் தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-
“கடந்த 10 வருடங்களில் யூடியூப், ப்ளாக்கர் (Blogger) மற்றும் கூகுள்+ (Google+) ஆகிய ஊடகங்கள் அபரிவிதமான வளர்ச்சியை பெற்றுள்ளன. இவற்றின் வளர்ச்சி ஆர்குட் -ன் சேவையை பாதித்துள்ளது. அதனால் ஆர்குட்-ன் சேவை நிறுத்திக் கொள்ளப்படுகின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஏற்கனவே உள்ள பயனர்கள் தங்கள் தகவல்கள் மற்றும் தரவுகளை வரும் 2016 ஆம் ஆண்டு வரை பராமரிக்க மற்றும் பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்குட்-ல் உள்ள பயனர்களின் எண்ணிக்கையை பற்றி அறிவிக்க கூகுள் மறுத்துவிட்டாலும், போட்டி நிறுவனமான பேஸ்புக்-ன் எண்ணிக்கை 1.28 பில்லியன் பயனர்களைத் தாண்டி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.