சரவாக், ஜூலை 5 – சரவாக் மாநிலத்தில் உள்ள 4.28 பில்லியன் முரும் அணையில் கடுமையான சேதங்கள் உள்ளதால், அணை உடையும் அபாயம் உள்ளதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த ‘சரவாக் ரிப்போர்ட்’ என்ற இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த அணையில் கட்டுமான குத்தகை நிறுவனமான சரவாக் எனர்ஜி பெர்ஹாடிற்கு இந்த பிரச்சனை குறித்து கடந்த மார்ச் மாதமே தெரியும் என்றும், இருந்தும் இந்த விவகாரத்தை பொதுமக்களுக்கு தெரியாமல் ரகசியமாக வைத்துள்ளனர் என்றும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
எனினும், நோர்வேயை சேர்ந்த நோர்கன்சல்ட் நிறுவனம், அணை உலைகளில் தனிப்பட்ட முறையில் சுதந்திரமாக நடத்திய ஆய்வில், இந்த அபாயம் இருப்பது கண்டறியப்பட்டு தற்போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முரும் அணையைக் கட்டிய, சீனாவைச் சேர்ந்த திரீ கோர்ஜெஸ் டெவலப்மெண்ட் நிறுவனத்திடம், அணையின் சேதமடைந்த பாகங்களை சரி செய்து கொடுக்குமாறு தற்போது கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து நோர்கன்சல்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “அணையில் உலைகளில் வெல்டிங் மற்றும் கிரைனிங் தரமாக செய்யப்படவில்லை. இந்த பிரச்சனையை சம்பந்தப்பட்ட நிறுவனம் உடனடியாக சோதனை செய்து அதை சரி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.