புதுடெல்லி, ஜூலை 12 – அமெரிக்காவிற்கு வருகை தரும்படி இந்திய பிரதமர் மோடிக்கு, அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா முறையான அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா – அமெரிக்கா நாடுகளின் நல்லுறவில் சமீப காலமாக சிறிய பூசல் இருந்து வருகின்றது. இதனை சரி செய்ய இரு நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இதன் முதல் படியாக இரு நாடுகளுக்கு இடையே தார்மீக ஒத்துழைப்பும், வர்த்தக ரீதியிலான உடன்பாடுகளும் புத்துணர்வு பெற இந்திய பிரதமர் மோடி, அமெரிக்கா வரும் படி அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு துறை துணை அமைச்சர் வில்லியம் பேன்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் அதிபர் பராக் ஒபாமா எழுதிய கடிதத்தை மோடியிடம் வழங்கினார். அந்த கடிதத்தில் வரும் செப்டம்பர் மாதம் வாஷிங்டன் வருமாறு பிரதமர் மோடிக்கு அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வில்லியம் பேன்ஸ் “எதிர் வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் மோடி வருகைக்காக வெள்ளை மாளிகை காத்திருகிறது” என்று குறிப்பிட்டார். முன்னதாக அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் நிதியமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோரை சந்தித்து பேசினார்.