சகரான்பூர், ஜூலை 27 – உத்தரப் பிரதேசத்திலுள்ள சகரான்பூர் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கலவரத்தில் இதுவரை 3 பேர் பலியாகியிருப்பதோடு, 20 பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் மாவட்ட நீதிபதியும், காவல் துறையினரும் அடங்குவர்.
கலவரக்காரர்கள் ஆங்காங்கு தீ வைத்தனர்.
மேலும் 20பேர் வரை இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தைக் கலைக்க காவல் துறையினர் இரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தி கலவரக்காரர்களை விரட்டியடித்தனர்.
இருப்பினும் தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகின்றது. மீண்டும் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான காவல் துறையினரும், பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். துணை இராணுவப்படையும் வரவழைக்கப்பட்டுள்ளது.
காவல் துறையின் மூத்த அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.
நிலத் தகராறு
ஒரு நிலப் பிரச்சனை காரணமாக இரண்டு சமூகங்களுக்கு இடையில் கலவரம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊரடங்கு தொடர்வதோடு, கண்டதும் சுடும் உத்தரவும் அந்தப் பகுதியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தலைநகர் புதுடில்லியிலிருந்து 170 கிலோ மீட்டர் தொலைவிலும் – உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவிலிருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள நகர் ஷகாரான்பூர் ஆகும்.