Home வணிகம்/தொழில் நுட்பம் புதிய உயரத்தை நோக்கி மலேசியாவின் அயலாக்கத்துறை

புதிய உயரத்தை நோக்கி மலேசியாவின் அயலாக்கத்துறை

433
0
SHARE
Ad

Outsourcing Malaysia (OM) Chairman David Wongகோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – மலேசிய ‘அயலாக்கத்துறை’ (Outsourcing Sector) புதிய உயரத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு உள்நாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் அயலாக்கத்தில் பங்கு கொள்ள அந்த துறையின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பொருட்களின் தயாரிப்புகளுக்கோ அல்லது சேவைகளுக்கோ அந்நிய நிறுவனங்களை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளும் அயலாக்கத்துறையில், மலேசியா, நடப்பு நிதி ஆண்டில் (2013-2014) 27 சதவீத உயரத்தை அடைந்துள்ளதாகவும், இதன் மதிப்பு 1.59 மில்லியன்  ரிங்கிட்கள் எனவும் அந்த துறை அறிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் மதிப்பு 1.25 மில்லியன் ரிங்கிட்கள் ஆகும்.

இது குறித்து  மலேசிய அயலாக்கத்துறை தலைவர் டேவிட் வாங் கூறுகையில், “ஒரே வருடத்தில் 27 சதவீத வளர்ச்சி என்பது இந்த துறையில் வரவேற்கத்தக்க மாற்றமாகும்.  எனினும், பிற போட்டியாளர்களை ஒப்பிடும் போது, இன்னும் போதுமான வளர்ச்சியை நாம் எட்ட வில்லை.”

#TamilSchoolmychoice

“அரசு தன்னார்வத்துடன் மேற்கொண்ட பொருளாதார மாற்றுத் திட்டங்களும், நிறுவனங்களின் தொழில் ரீதியிலான முயற்சிகளுமே, இந்த துறையில் இன்று நாம் எட்டி இருக்கும் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.”

“எனினும், இந்த துறையில் நாம் உச்சத்தை எட்டுவதற்கு இன்னும் பல வாய்ப்புகள் உள்ளன. 1.59 மில்லியன்  ரிங்கிட்கள் மதிப்புடைய இந்த வளர்ச்சியில், உள்நாட்டு நிறுவனங்களின் பங்குகள் வெறும் 25 சதவீதமே ஆகும். ஏனைய பங்குகள் அனைத்தும் அந்நிய நிறுவனங்களால் உருவானவை.”

“உள் நாட்டு நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை உள்ளூர் சந்தைகளில் மட்டும் விரிவு படுத்தாமல், உலக அளவில் நிறுவுவதற்கு முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் மலேசியாவின் மதிப்பு உலக அளவில் வரம்பற்ற வளர்ச்சியை எட்டும்.”

“உள்நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு அயலாக்கம் தொடர்பான அனைத்து ஆலோசனைகளையும் வழங்க மலேசிய அயலாக்கத்துறை தயாராக உள்ளது. இதன் மூலம் உள்நாட்டு வருமானம் அதிகாரிக்கு வாய்ப்புள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.