வாஷிங்டன், ஆகஸ்ட் 1 – அமெரிக்க அதிபர் ஒபாமா மீது வழக்கு தொடர இருப்பதாக, அந்நாட்டு குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘ஒபாமா கேர்’ (Obama Care) என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2010-னை, நடைமுறைப்படுத்த அதிபர் ஒபாமா தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக அவர் மீது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து அமெரிக்க குடியரசுக் கட்சியினர் கூறியதாவது:- “ஒபாமாவின் ஆட்சியில் பெரிதாக பேசப்பட்ட காப்பீட்டுத் திட்டம் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக ஏனைய பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் அந்தத் திட்டத்தின் பலனைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், முந்தைய மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை காலாவதியானதாக அறிவித்தது, மக்களுக்கு கடும் ஆத்திரமூட்டும் செயலாக அமைந்தது” என்று கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அதிபர் ஒபாமா மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து, கடந்த புதன் கிழமை வாக்கெடுப்பு நடந்தது. இதில் அவருக்கு ஆதரவாக 201 பேரும், எதிராக 225 பேரும் வாக்களித்தனர். இதையொட்டி ஒபாமா மீது எதிர் கட்சிகள் வழக்கு தொடர, நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.