புதுடெல்லி, ஆகஸ்ட் 1 – பாதுகாப்பு மற்றும் எரிசக்தி துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினரோடு நேற்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு நாடுகளின் பிரதிநிதிகள் இடையே முறைப்படி பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பாக இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.
இந்த சந்திப்புக்கு முன்பாக, ஜான் கெர்ரியும் அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் பென்னியும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தனர்.
உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்காவின் யோசனைகளுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஜெட்லியுடன், ஜான் கெர்ரி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இந்தியா ஒரு நல்ல வர்த்தக வாய்ப்பு உள்ள நாடு. எனவே, உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் தொடர்பாகவும் இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.