Home இந்தியா சுஷ்மா சுவராஜ் காலமானார்

சுஷ்மா சுவராஜ் காலமானார்

1411
0
SHARE
Ad

புதுடில்லி – (மலேசிய நேரம் காலை 8.00 மணி நிலவரம் – கூடுதல் தகவல்களுடன்) பாஜகவின் கடந்த முதல் தவணை ஆட்சியில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சராக சிறப்புறப் பணியாற்றிய சுஷ்மா சுவராஜ் நேற்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) மாரடைப்பால் காலமானார்.

67 வயதான அவரது திடீர் மறைவு பாஜகவினரையும் இந்திய நாட்டினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார் என்றாலும் கடந்த சில நாட்களாக அவர் நல்ல உடல் நலத்தோடு இருந்தார் என்றும் அரசாங்கத்தின் அண்மைய முடிவுகளுக்காக பாஜக தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.

அயல் நாட்டு அமைச்சர்கள், தூதர்கள் ஆகியோருடன் தோளுடன் தோள் உரசிப் பழகும் உயர்நிலைப் பதவி என்றே இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பதவி பார்க்கப்பட்டாலும், அந்தப் பதவிக்கு புதிய தோற்றத்தையும் முகத்தையும் கொடுத்தவர் சுஷ்மா சுவராஜ்.

அன்வார் இப்ராகிமின் இந்திய வருகையின்போது அவரைச் சந்தித்த சுஷ்மா சுவராஜ்
#TamilSchoolmychoice

இந்தியக் குடியுரிமை பெற்ற தனிநபர் ஒருவர் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டாலும், தனது அனைத்துலகக் கடப்பிதழைத் தொலைத்துவிட்டாலும், சுஷ்மா சுவராஜின் டுவிட்டர் பக்கத்திற்கு ஒரு செய்தி அனுப்பினால் போதும் – உடனடியாக தீவிர நடவடிக்கையில் இறங்கி அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் நடைமுறையைத் தனது பதவிக் காலத்தில் கொண்டுவந்தவர் இவர்.

வாஜ்பாயி அரசாங்கத்திலும் அமைச்சர் பதவி வகித்தவர், டில்லி முதலமைச்சராகவும், பாஜக ஆட்சியின் நரேந்திர மோடியின் கீழ் வெளியுறவு அமைச்சராகவும் சிறப்புறப் பணியாற்றியிருக்கிறார்.

தனது உடல்நலம் காரணமாக, 2018 பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார் சுஷ்மா. அவர் மாநில ஆளுநராகப் பதவியேற்பார் என்ற ஆரூடங்களும் உலவி வந்தன.

அவரது நல்லுடல் தற்போது அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, சாரி சாரியாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். கட்சி வித்தியாசமின்றி அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இறுதிச் சடங்குகள் முடிந்தவுடன் அவரது நல்லுடல் பாஜக தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அதன் பின்னர் இன்று புதன்கிழமை பிற்பகலில் தகனம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.