பெய்ஜிங், ஆகஸ்ட் 5 – சீனாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில், சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது. சுமார் 80,000 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
சம்பவம் நடந்த இடத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கடும் சிரமத்துக்கு மத்தியில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றது. சீனாவின் யுன்னான் மாகாணத்தில், கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
(நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்கள்)
ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கமானது, வட கிழக்கே உள்ள குன்மிங் பிராந்தியம் வரை உணரப்பட்டது. இந்த சம்பவத்தில் பல மாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.
80 ஆயிரம் வீடுகள் முற்றிலும் இடிந்து நாசமானது. 1 லட்சத்து 24 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
(மீட்பு பணியாளர்கள் சம்பவம் நேர்ந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர்)
சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு இடையே ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 – ஐ தாண்டியுள்ளது.
காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக 4000 மீட்பு குழுக்களை சீன அரசு அனுப்பி உள்ளது.
(காயமடைந்த ஒருவரை மீட்புப் படையினர் சிகிச்சைக்கு கொண்டு செல்கின்றனர்)
இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், மீட்பு படை வீரர்கள் முனைப்புடன் செயல்படுகின்றனர். இடிபாடுகளை அகற்றும் பணியும் தீவிரமடைந்துள்ளது.
மீட்பு பணிகளை சீனப் பிரதமர் லீ கெகியாங் நேரில் சென்று பார்வையிட்டார். இதற்கிடையே, சம்பவம் நடந்த இடத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், கடும் சிரமத்துக்கு இடையே மீட்பு பணிகள் நடந்து வருகின்றது.
(பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்)
கனமழை 3 நாட்களுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மீட்பு பணிகளில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால், மாற்று வழிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
படங்கள்: EPA