வாஷிங்டன், பிப்.21- கணினி கோளாறு காரணமாக, தரைகட்டுப்பாட்டு தளத்துக்கும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு, சில மணி நேரம் துண்டிக்கப்பட்டது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் ஒன்றிணைந்து, விண்வெளியில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை நிறுவியுள்ளன.
தற்போது, இந்த மையத்தில், இரண்டு அமெரிக்கர்களும், மூன்று ரஷ்யர்களும், கனடா நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவரும் தங்கியுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான உணவு, பிராணவாயு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், சோயுஸ் உள்ளிட்ட விண்கலங்கள் மூலம், அனுப்பப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, நேற்று முன்தினம், இந்த மையத்துடனான தொடர்பு, திடீரென துண்டிக்கப்பட்டது. அமெரிக்காவின், ஹூஸ்டன் நகரில் உள்ள, தரை கட்டுபாட்டு மைய அதிகாரிகள், விரைந்து செயல்பட்டு, காரணத்தை ஆராய்ந்த போது, கணினியில் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்த கோளாறு சரி செய்யப்பட்ட பின், மூன்று மணி நேரத்துக்கு பிறகு, மீண்டும் தகவல் தொடர்பு இணைப்பு சரியானது.