சான் பிரான்சிஸ்கோ, ஆகஸ்ட் 15 – உலக அளவில் வலையமைப்புக் கருவிகள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம் ‘சிஸ்கோ’ (Cisco) சுமார் 6000 ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
கணினி வலையமைப்பிற்குத் தேவையான ‘ரவுட்டர்’ (Router), ‘ஸ்விட்ச்’ (Switch) போன்ற நவீன கருவிகளைத் தயாரிக்கும் சிஸ்கோ இந்தத் துறையில் நீண்ட அனுபவமும், நன்மதிப்பையும் பெற்றுள்ளது. எனினும் இந்த ஆண்டு தொடக்கம் முதல் சிஸ்கோவின் வருமானம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் 6000 ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் தொடக்கம் முதலே பெரும் வளம் கொழிக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையின் வர்த்தகம் இறங்கு முகமாகவே உள்ளது. அண்மையில் மென்பொருள் தயாரிப்பில் இன்றியமையாத நிறுவனமான மைக்ரோசாஃப்ட், 18000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்து இருந்தது. மைக்ரோசாஃப்ட்டின் இந்த அறிவிப்பால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக சிஸ்கோவின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
உலக அளவில் இணையப் பயன்பாடுகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. அதனால் பயனர்களின் எண்ணிக்கையும் கணக்கீடுகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. எனினும் இந்த நிறுவனங்கள் வீழ்ச்சி நோக்கி சென்று கொண்டிருப்பதாக அறிவித்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. ஆனால் இதற்கான காரணம், தொழில்நுட்பச் சந்தைகளில் சிறிய நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளே ஆகும்.
சிஸ்கோ நிறுவனத்தின் ரவுட்டர்கள் பல லட்சங்களைத் தாண்டும். ஆனால் சந்தைகளில் சிறிய நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில் ரவுட்டர்களைத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றது. அது தரமானதா என்ற கேள்வியை விட குறைந்த விலையில் உள்ளது என்பதே முன்னணியில் இருப்பதால், பெரும் நிறுவனங்களுக்கான வர்த்தகம் குறைந்து வருகின்றது.
சிஸ்கோ நிறுவனத்தின் உற்பத்தி ஆண்டு ஒன்றுக்கு 4 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரை குறைந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. உற்பத்தி குறைவதால் ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.