கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு பெற இருப்பதால், இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கான பயணக் கட்டணத்தை 40 சதவீதம் தள்ளுபடி செய்துள்ளது.
பயணிகள் இந்த சிறப்பு சலுகை கட்டணத்தை அடுத்த வருடம் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை பெற முடியும். எனினும் இம்மாதம் 31-தேதிக்குள் பயணிகள் தங்கள் முன்பதிவினை நிறைவு செய்ய வேண்டும்.
இது பற்றி மாஸ் நிறுவனத்தின் கிழக்கு ஆசியா பிரிவின் துணைத் தலைவர் அசார் ஹமித் கூறியதாவது:-
“ஆரம்ப விற்பனையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனால் நாங்கள் இந்த சிறப்பு சலுகையை மீண்டும் அறிவித்துள்ளோம். கடந்த முறை வாய்ப்பை தவறவிட்டவர்கள் அதனை இம்முறை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.
மாஸ் நிறுவனம் அறிவித்துள்ள சிறப்பு சலுகைக் கட்டணங்கள் பின்வருமாறு:
இந்தியாவில் இருந்து கோலாலம்பூருக்கு மும்பை வழியாக பயணம் மேற்கொள்ள இந்திய மதிப்பில் ரூபாய் 20,511 (RM 1,064), டெல்லி இருந்து லங்காவிக்கு ரூபாய் 19,720 (RM 1,023), கொச்சியிலிருந்து சிங்கபூருக்கு ரூபாய் 24,597 (RM 1,276), பெங்களூரிலிருந்து ஷங்கைக்கு ரூபாய் 24,597 (RM 1,276) மற்றும் சென்னையிலிருந்து ஆக்லாந்திற்கு ரூபாய் 48,929 (RM 2,538) ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் டெல்லி, கொச்சி, பெங்களூர், சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உள்ள மாஸ் நிறுவனத்தின் மையங்களில் தங்கள் முன்பதிவினைத் தொடங்கலாம்.