கொஹிமா, பிப். 22- நாகாலாந்தின் மொத்த வாக்காளர்களில், 49 சதவீதம் பேர், பெண்களாக இருந்தாலும், நாளை நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், இரண்டு பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
நாகாலாந்தில், நெபியூ ரியோ தலைமையிலான, நாகாலாந்து மக்கள் முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இந்த கட்சிக்கு, பா.ஜ., ஆதரவு அளிக்கிறது.
இங்கு, காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.இந்த மாநிலத்தில் உள்ள, 60 சட்டசபை தொகுதிகளுக்கு, நாளை, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இங்குள்ள, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 11 லட்சம். இதில், 49 சதவீத வாக்காளர்கள், பெண்கள்.
இந்த தேர்தலில், அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என, 188 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதில், பா.ஜ., சார்பில் போட்டியிடும், ரகிலா; சுயேச்சையாக போட்டியிடும், யங்கெர்லா ஆகிய இருவர் மட்டுமே, பெண்கள்; மற்ற அனைவரும், ஆண்கள்.
கடந்த சட்டசபை தேர்தலில், நான்கு பெண்கள் போட்டியிட்டனர். ஆனால், அவர்களில் யாருமே, வெற்றி பெறவில்லை. இந்த தேர்தலில், இரு பெண் வேட்பாளர்களில், ஒருவராவது வெற்றி பெற்றால் தான், அடுத்த தேர்தலில், பெண்கள், அதிக அளவில் போட்டியிட முன் வருவர்’ என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.