நியூயார்க், ஆகஸ்ட் 27 – உலகளாவிய அமெரிக்க உணவகத் தொடரான பர்கர் கிங் நிறுவனம், கனடாவின் டிம் ஹோர்ட்டன்ஸ் உணவக நிறுவனத்தை 11 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளதாக நேற்று அறிவித்தது.
இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களின் தனித்தனி வணிக முத்திரை சின்னங்களுடனும் (brands) தனித் தனி நிர்வாகங்களுடனும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் டிம் ஹோர்ட்டன்ஸ் நிறுவனம், டொனட் (doughnut) எனப்படும் உணவு வகைகளையும், காப்பி போன்ற பானங்களையும் விற்பனை செய்யும் தொடர் உணவகமாகும் (Chain restaurant).
பர்கர் கிங், மெக் டொனால்ட் போன்று ரொட்டிகளில் இறைச்சிகளை இணைத்து விற்பனை செய்யும், உலகெங்கும் பரவியுள்ள, மற்றொரு தொடர் உணவகமாகும்.
இந்த இரண்டு மாபெரும் உணவக நிறுவனங்களும் ஒன்றிணைந்து, ஏறத்தாழ 100 நாடுகளில் 18,000 உணவகங்களோடு, ஆண்டுக்கு சுமார் 23 பில்லியன் அமெரிக்க டாலர் மொத்த விற்பனையோடு இனி செயல்படும்.
அமெரிக்காவின் நகர் ஒன்றில் இயங்கும் பர்கர் கிங் உணவகத்தின் தோற்றம்…
இந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பில் உருவாகும் புதிய நிறுவனம், பங்குச் சந்தையில் இடம் பெற்றிருப்பதோடு, கனடாவில் தலைமையகத்தில் கொண்டிருக்கும்.
இணைப்பிற்குப் பின் இந்த இரண்டு நிறுவனங்களும் கனடாவில் அதிகமான உணவகங்களைக் கொண்டிருப்பதோடு, அந்த நாட்டில் மிகப் பெரிய சந்தையையும் கொண்டிருக்கும்.
கனடாவிற்கு தனது தலைமையகத்தை மாற்றிக் கொள்வதன் மூலம், அமெரிக்க நிறுவனமான பர்கர் கிங் பெருமளவில் வரி சலுகைகளை ஈட்ட முடியும் எனக் கருதப்படுகின்றது. கனடாவுக்கு தலைமையகத்தை மாற்றுவதன் நோக்கமும் அதுதான் என வணிக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பர்கர் கிங்-டிம் ஹோர்ட்டன்ஸ் இணைந்த புதிய நிறுவனம், துரித உணவக சேவைகளில் உலகிலேயே மூன்றாவது பெரிய நிறுவனமாக இனி உருவெடுக்கும்.
Photos: EPA