Home One Line P2 பர்கர் கிங் : இந்தியாவிலும் வெற்றிகரமாகக் கால் பதிக்கிறது

பர்கர் கிங் : இந்தியாவிலும் வெற்றிகரமாகக் கால் பதிக்கிறது

598
0
SHARE
Ad

மும்பை : மேக் டொனால்ட் போன்று ரொட்டித் துண்டுகளோடு, மாமிச வகை உணவுகளைத் தயாரித்து வழங்கும் தொடர் உணவகமான பர்கர் கிங் இந்தியாவிலும் வெற்றிகரமாகக் கால் பதித்திருக்கிறது.

அந்நிறுவனத்தின் பங்குகள், பொதுவிநியோகம் மூலம் பொதுமக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு, இந்த வாரம் திங்கட்கிழமை (டிசம்பர் 14) மும்பை பங்குச் சந்தையில் முதன் முறையாகப் பட்டியலிடப்பட்டன.

60 ரூபாய் என்ற விலையில் பர்கர் கிங் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் திங்கட்கிழமை முதன் முதலில் பட்டியலிடப்பட்டபோது 112 ரூபாய் 50 காசு என அதன் விலைகள் இருமடங்காக உயர்ந்தன. தொடர்ந்து விலையேற்றம் கண்ட பர்கர் கிங் பங்குகள் 135 ரூபாய் வரை உயர்வு கண்டன.

#TamilSchoolmychoice

இன்று புதன்கிழமை பர்கர் கிங் இந்தியாவின் பங்கு விலைகள் 194 ரூபாய் வரை உயர்ந்தன.

இந்தப் பொதுப் பங்கு விநியோகம் மூலம் 8.1 பில்லியன் ரூபாய் அதாவது 110 மில்லியன் டாலர் முதலீட்டை பர்கர் கிங் திரட்டியுள்ளது.

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலாக பர்கர் கிங் இந்தியாவில் உணவகத்தைத் திறந்தது. இதுவரையில் ஏறத்தாழ 270 தொடர் உணவகங்களை பர்கர் கிங் திறந்திருக்கிறது.

அடுத்த ஆண்டுக்குள் தங்களின் வணிகத்தை மேலும் விரிவாக்கி சுமார் 300 உணவகங்களைத் திறக்க பர்கர் கிங் திட்டமிட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டுக்குள் 700 உணவகங்களைத் திறக்க பர்கர் கிங் வியூகம் வகுத்துள்ளது.

எனினும், மேக் டொனால்ட், கெண்டக்கி பிரைட் சிக்கன், டோமினோ பிசா, சப்வே, பிசா ஹட் என பல மேற்கத்திய நாடுகளின் தொடர் உணவகங்களிடமிருந்து பர்கர் கிங் கடும் போட்டியையும் எதிர்நோக்கி வருகிறது.

துரித உணவுகளுக்கான, பொட்டலம் மூலம் விநியோகம் செய்யப்படும் உணவுகளுக்கான முக்கிய சந்தையாக உருவெடுத்துள்ளது. 2019-ஆம் ஆண்டில் இந்த சந்தையின் மதிப்பு 4.6 பில்லியன் டாலர்களாக இருந்தது.

எதிர்வரும் 2024-ஆம் ஆண்டில் இந்த சந்தையின் மதிப்பு 5.6 பில்லியன் டாலர்களாக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளில் பர்கர் கிங் மாட்டிறைச்சி உணவுகளுக்குப் புகழ் பெற்றதாகும். மலேசியாவிலும் பர்கர் கிங் உணவகங்களில் மாட்டிறைச்சி உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆனால், இந்தியாவில் பர்கர் கிங் தனது வணிக வியூகத்தை மாற்றியமைத்திருக்கிறது.

இந்தியாவில், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி கலந்து உணவுகளைத் தாங்கள் விற்பனை செய்யப்போவதில்லை என பர்கர் கிங் அறிவித்திருக்கிறது.

மாறாக, 18 வகையான பர்கர் வகை உணவுகளை இந்தியச் சந்தைக்கென பர்கர் கிங் தயாரித்திருக்கிறது. இதில் 7 வகை பர்கர்கள் சைவ உணவுகளாகும்.