Home One Line P2 ஆஸ்ட்ரோ “சமையல் சிங்காரி” – கலைஞர்களின் அனுபவங்கள்

ஆஸ்ட்ரோ “சமையல் சிங்காரி” – கலைஞர்களின் அனுபவங்கள்

756
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ விண்மீன் துல்லிய ஒளிபரப்பில் (எச்.டி) ஒளிபரப்பாகி வரும் ‘சமையல் சிங்காரி’ என்ற தொடர் நிகழ்ச்சி பரவலான வரவேற்பை இரசிகர்களிடையே பெற்றுள்ளது.

அந்த நிகழ்ச்சியைத் தயாரிப்பதிலும், படைப்பதிலும் பங்கு கொண்ட கலைஞர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் :

நிர்வாகத் தயாரிப்பாளர்: காந்திமதி சுப்பையா

காந்திமதி சுப்பையா

• சமையல் சிங்காரி நிகழ்ச்சியில் இரசிகர்கள் எவற்றை எதிர்ப்பார்க்கலாம் எனப் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

#TamilSchoolmychoice

சமையல் சிங்காரி ஒரு சுவாரசியமான கதையைக் கொண்ட சமையல் நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியில், பலவகையான சுவையான சமையல் குறிப்புகள் இடம்பெறுவதோடு அழிந்து போகக்கூடிய பொருட்களிலிருந்து அழகுக் குறிப்புகளை உருவாக்குதல், சமையலறையில் உடற்பயிற்சிகளுக்கான யோசனைகள் போன்ற வாழ்க்கை முறை குறிப்புகளும் பகிரப்படும். 13 அத்தியாயங்களில் இடம்பெறும் சுவாரசியமான நாடகத்தையும் இரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

• இச்சமையல் நிகழ்ச்சிக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?

வழக்கமாக உணவகங்களில் வாங்கப்படும் கம் ஹியோங் சிக்கன் (Kam Heong Chicken), சில்லிக் கிராப் (Chilli Crab), திராமிசு (Tiramisu) போன்ற உணவுகளை சமைக்க முயற்சி செய்ய இந்நிகழ்ச்சி இரசிகர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். மேலும், பல சுவையான சமையல் குறிப்புகளைப் பகிர்ந்துக் கொள்ள இரண்டாவது பருவம் (சீசன்) வரை செல்ல, இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பான ஆதரவு இரசிகர்களிடையே கிடைக்கும் என்று நம்புகிறேன்.

சமையல்காரர் (செஃப்): சாந்தி ராஜ்

சாந்தி ராஜ்

• ஒரு சமையல்காரராக (செஃப்) உங்களின் அனுபவத்தையும் இத்துறையில் உங்களின் பயணத்தை எவ்வாறு தொடங்கினீர்கள் என்பதையும் எங்களிடம் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

என்னுடைய இளைய பருவத்தில், என் அம்மாவுக்குச் சமையலறையில் உதவ வேண்டியிருந்தது. ஆனால், அதிலிருந்துத் தப்பிப்பதற்கான வழிகளை நான் எப்போதும் தேடுவேன். இருப்பினும், நான் இறுதியில் என் அம்மாவின் ஆலோசனைக்கேற்பச் சமையலை இரசிக்கத் தொடங்கினேன். என் அம்மா சமைக்கும் முறைகளை கவனித்தது எனக்கு சில அடிப்படைச் சமையலறிவைக் கொடுத்தது.

இவ்வேளையில், என்னைச் சமைக்கத் தூண்டியதற்காக என் அம்மாவுக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். படிப்படியாக, நான் இன்னும் பல தனித்துவமான உணவுகளை சமைக்க முயற்சி செய்தேன். சமையலில் என் படைப்பாற்றலைக் கண்டு என் குடும்பம் என்னைப் புகழ்ந்து பேசத் தொடங்கியது. என் கணவர் மற்றும் மகனின் பாராட்டுக்கள் இன்னும் பல புதிய சமையல் வகைகளை முயற்சி செய்யத் தூண்டியது.

• இந்த நிகழ்ச்சியில் உங்களின் மறக்க முடியாதத் தருணங்களைப் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு மறக்க முடியாத தருணமே. ஏனென்றால், ஒரு அற்புதமான குழுவினரிடமிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். இது எனது அதிர்ஷ்டமே. எங்களின் இயக்குனர், லோகன் மற்றும் தொகுப்பாளர், விக்கிக்கு மிகப் பெரிய நன்றிகள். மேலும், இந்த வாய்ப்பிற்காக நான் ஆஸ்ட்ரோவுக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

ஏனெனில், ஆஸ்ட்ரோவின் சமையல் நிகழ்ச்சியில் ஒரு சமையல்காரராக இடம் பெற்றது என்னைப் பொறுத்தவறை ஒரு கனவு நனவாகியது என்றுதான் கூறுவேன். இந்தச் சமையல் நிகழ்ச்சிக்கு என்னைத் தேர்ந்தெடுத்தச் சமையல் சிங்காரியின் நிர்வாகத் தயாரிப்பாளர், காந்திமதிக்கும் இவ்வேளையில் நன்றிக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

தொகுப்பாளர்: விக்கி ராவ்

விக்கி ராஜ்

• சமையல் சிங்காரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய உங்களின் அனுபவத்தையும் சில இனிமையானத் தருணங்களையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்? ருசி பார்த்தல் என நிகழ்ச்சியின் பிற பகுதிகளையும் நீங்கள் இரசித்தீர்களா?

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது சற்று வேடிக்கையாக இருந்தது. ஏனெனில், நான் செஃப், சாந்தி ராஜ் உடன் மட்டுமே உரையாடினேன். பிற நிகழ்ச்சிகளைப் போல் இரசிகர்களுடன் அல்ல.

13 அத்தியாயங்கள் முழுவதும் இடம் பெற்ற நாடகம், எங்களுக்கிடையேயான உரையாடலை மேலும் இயல்பானதாக்கியதோடு எதார்த்தத்தையும் ஏற்படுத்தியது. மேலும், இது ஒரு சமையல் நிகழ்ச்சியை விட சூழலுக்கு ஏற்ற நகைச்சுவை (சிட்காம்) நிகழ்ச்சியைப் போலிருந்தது.

இந்திய உணவுகளைச் சமைக்க நான் நன்கு அறிந்திருந்ததால், சீன, தாய், மேற்கத்திய உணவு வகைகளைச் சமைக்கும் முறைகளைக் கற்றுக்கொள்ள நான் எப்போதும் விரும்பினேன். சமையல் சிங்காரி நிகழ்ச்சி எனக்கு அவ்வற்புதமான வாய்ப்பை வழங்கியது. அதுவே எனக்கு மிகவும் பிடித்தமானத் தருணம். சமையல் முடிந்ததும், நாங்கள் சமைத்த உணவுகளைச் சுவைப்போம்.

• சமையல் சிங்காரி நிகழ்ச்சி வழியாக நீங்கள் கற்றுக்கொண்ட சில முக்கிய கற்றல் / சமையல் குறிப்புகள் யாவை?

நல்ல வழிகாட்டுதலுடன், யார் வேண்டுமானாலும் நல்ல சமையல்காரராக முடியும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். மேலும், சில உணவுகளைச் சமைக்கும்போது பயன்படுத்த வேண்டிய சரியான பொருட்களைத் தெரிந்துக்கொண்டால், சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவைச் சமைக்க முடியும் என்பதையும் நான் கற்றுக்கொண்டேன்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், இரவு 9 மணிக்கு, விரும்பத்தக்க சமையல் குறிப்புகளை அறிய சமையல் சிங்காரி நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களைக் கண்டுக் களியுங்கள். அல்லது எப்போது வேண்டுமானாலும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.