ஹைனான், செப்டம்பர் 3 – ஆசியாவில் வர்த்தகத்திற்கு பெயர் பெற்ற இடமாக விளங்கும் சீனா, பொருட்களுக்கு இறக்குமதி வரி இல்லாமல் விற்பனை நடைபெறும் உலகின் மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்றை திறந்துள்ளது.
தெற்கு சீனாவின் தீவுப் பகுதியான ஹைனான் மாகாணத்தின் சன்யா நகரில், சுமார் 72,000 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று அடுக்கு மாடிகள் கொண்டதாக அந்த வணிக வளாகம் திறக்கப்பட்டுள்ளது. ‘ஹைட்டாங் பே இண்டர்நேஷனல்’ (Haitang Bay International) என்று பெயரிடப்பட்டுள்ளது அந்த வணிக வளாகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் வர்த்தகம் தொடங்கியது.
இங்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீன அரசு எவ்வித இறக்குமதி வரியையும் விதிக்காமல், தயாரிப்பு விலையிலேயே விற்பனை செய்ய அனுமதி வழங்கி உள்ளது. அதனால் இங்கு 300-க்கும் மேற்பட்ட சர்வதேச வணிக அடையாளங்களுடன் கூடிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தங்க நகைகள், கைக்கடிகாரங்கள், வாசனை திரவியங்கள், அழகிய வேலைப்பாடு மிக்க தோல் பொருட்கள் உள்ளிட்டவை இறக்குமதி வரியின்றி தயாரிப்பு விலைக்கே விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் அங்கு நாளுக்கு நாள் மக்களை வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வணிக வளாக அஹிகாரி ஒருவர் கூறியுள்ளார் .