நியூயார்க், செப்டம்பர் 8 – நேற்று இங்கு நடைபெற்ற அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
இதுவரை அமெரிக்க பொது டென்னிஸ் வெற்றியாளர் கிண்ணத்தை அவர் ஆறு முறை வென்றிருக்கின்றார்.
இறுதி ஆட்டத்தில் அவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கேரலின் வோஸ்நியாகியைத் தோற்கடித்து வெற்றியாளர் கிண்ணத்தைக் கைப்பற்றினார். இந்த வெற்றியினால் அவர் 4 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுப் பணத்தையும் பெறுகின்றார்.
கிராண்ட் ஸ்லாம் (Grand Slam) எனப்படும் டென்னிஸ் போட்டிகளில் இது அவர் பெற்றிருக்கும் 18வது வெற்றியாகும்.
உலகின் முக்கிய நான்கு டென்னிஸ் போட்டிகள் ஒட்டு மொத்தமாக கிராண்ட் ஸ்லாம் என்று அழைக்கப்படுகின்றது. ஆஸ்திரேலிய பொது டென்னிஸ், பிரெஞ்ச் பொது டென்னிஸ், அமெரிக்க பொது டென்னிஸ், இங்கிலாந்து நாட்டின் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆகியவையே அந்த நான்கு போட்டிகளாகும்.
இரண்டாவது நிலை வெற்றியாளரான டென்மார்க் நாட்டின் கேரலின் வோஸ்நியாகியுடன் (இடது) வெற்றியாளர் கிண்ணத்துடன் செரினா வில்லியம்ஸ்.
அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற பூரிப்புடன் செரினா வில்லியம்ஸ் – இடது புறம் இருப்பவர் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவ்ராடிலோவா – வலது புறம் இருப்பவர் மற்றொரு முன்னாள் டென்னிஸ் வீராங்கனை கிரிஸ் எவர்ட்.
ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியில் வெற்றி வாகை சூடியதன் மூலம் டென்னிஸ் விளையாட்டில், அனைத்துலக அரங்கில் கால் பதித்த செரினா, இதுவரை யாரும் காணாத அளவுக்கு முத்திரையும் பதித்துள்ளார்.
படங்கள்:EPA