Home கலை உலகம் தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது விழா – அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு!

தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது விழா – அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு!

720
0
SHARE
Ad

IMAG0331

கோலாலம்பூர், செப்டம்பர் 10 – தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என நான்கு மொழிகளைச் சேர்ந்த திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் மாபெரும் தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது விழா ( South Indian International Movie Awards -SIIMA) எதிர்வரும் செப்டம்பர்  12 மற்றும் 13 -ம் தேதிகளில் “ஸ்டேடியம் மெர்டேக்காவில்” பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள அஸ்ட்ரோ தலைமையகத்தில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இந்த சந்திப்பில் அஸ்ட்ரோ நிறுவத்தின் மூத்த துணை நிர்வாகி டாக்டர் ராஜாமணி செல்லமுத்து, மலேசிய சுற்றுலாத்துறையின் அனைத்துலக நிகழ்வுகளின் தலைவர் டோனி நாகமையா, தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் விஷ்ணு, மலேசிய தெலுங்கு சங்கத் தலைவர் டத்தோ டாக்டர் அக்சய் குமார் ராவ், மலேசிய மலையாளிகள் சங்கத் தலைவர் டான்ஸ்ரீ ரவிந்திரன் மேனன் மற்றும் அஸ்ட்ரோ நிறுவனத்தைச் சேர்ந்த முக்கியத் பொறுப்பாளர்கள் முருகையா, ரவிக்குமார், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது விழாவில் கலந்து கொள்ளப் போகும் நடிகர்கள், நடிகைகள் யார், கலைநிகழ்ச்சிகளில் யார் யாரெல்லாம் பங்கேற்பார்கள், அனுமதிச் சீட்டுகளின் விலை மற்றும் கிடைக்கும் இடங்கள் போன்ற பல முக்கியத் தகவல்கள் அறிவிக்கப்பட்டன.

இந்திய திரைநட்சத்திரங்கள்

இந்த மாபெரும் விருது வழங்கும் விழாவில் பாலிவுட் (இந்தி), டோலிவுட் (தெலுங்கு), கோலிவுட்(தமிழ்), மாலுவுட்(மலையாளம்), சாண்டல் வுட் (கர்நாடகம்) என மொத்தம் 5 மொழிகளைச் சேர்ந்த முன்னணி திரைநட்சத்திரங்கள் பங்கேற்கவுள்ளார்கள்.

அவர்களில் தமிழில் தனுஷ், சிவகார்த்திகேயன், குஷ்பு, பிரபு, விக்ரம் பிரபு, யுவன் சங்கர் ராஜா, ஆர்யா, சிம்பு, திரிஷா, பார்வதி மேனன், சூரி, அனிருத், கே.பாக்யராஜ், ராதிகா, பீட்டர் ஹெயின், லட்சுமி மேனன், லிங்குசாமி, ஸ்ரீதிவ்யா, ஸ்வேதா, விஷ்ணுவர்த்தன், நீத்து சந்திரா, ஸ்ரேயா சரண், ராஜீவ் மேனன், சோபி, அனல் அரசு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதில் சிம்பு, லட்சுமி மேனன், தமன்னா ஆகியோர் விழாவில் கலைநிகழ்ச்சிகள் படைக்கவுள்ளனர்.

மலையாள திரையுலகில் இருந்து பிரித்விராஜ், இஷா தல்வார், உன்னி கிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், அமலா பால், கலாபவன், திலீப் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்கவுள்ளனர்.

கன்னட திரையுலகில் இருந்து சிவராஜ் குமார், புனீத் ராஜ்குமார், ஆண்ட்ரிடா ராய், பிரியாமணி ஆகிய நட்சத்திரங்களும், தெலுங்கு திரையுலகில் இருந்து சிரஞ்சீவி, கே.ராகவேந்திர ராவ், டி.ராமா நாயுடு, முரளி மோகன், சுனில் போன்ற நட்சத்திரங்களும் பங்கேற்கவுள்ளனர்.

அதே வேளையில், இந்தி திரையுலகில் இருந்து ஸ்ரீதேவி, போனி கபூர், அசின், சோஹயில் கான், ஆப்டாப், மனோஜ் திவாரி, தமன்னா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

அனுமதிச் சீட்டுகள்

IMAG0334

இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த கோலாகல கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிச் சீட்டுகளின் விலை 99 ரிங்கிட் தொடங்கி 1499 ரிங்கிட் வரை விற்கப்படுகின்றன என்றும், நாடெங்கிலும் 24 விற்பனை நிலையங்களில் இந்த அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் நிகழ்ச்சி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வாகவும் இரண்டாம் நாள் தமிழ்ப் படங்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வாகவும் நடைபெறவிருக்கின்றது.

இரண்டு நாட்களுக்கு தனித்தனியாக அனுமதிச் சீட்டுகளை வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வியாழக்கிழமை முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலேயே அனுமதிச் சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

எனினும், நிகழ்ச்சிக்கான அனுமதிச் சீட்டுகள் பரபரப்பாக விற்றுக் கொண்டிருப்பதால் விரைவில் தீர்ந்துவிட வாய்ப்புள்ளதாகவும், உடனடியாக மக்கள் தங்களுக்கான அனுமதிச் சீட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சைமா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் விஷ்ணு கேட்டுக் கொண்டார்.

கடைசி நேரத்தில் அனுமதிச் சீட்டுகளைப் பெற முயன்று ஏமாற வேண்டாம் என்றும் விஷ்ணு தெரிவித்தார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் சுமார் 4500 பேர் வரை அமரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

90 விருதுகள்

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் விழாவில் ஐந்து மொழிகளிலும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என மொத்தம் 21 பிரிவுகளில், சிறந்த நட்சத்திரங்களுக்கு 90 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

நட்பு ஊடகங்களான பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் அதிக பிரபலமான ஒரு நட்சத்திரத்திற்கு ‘சோஷியல் மீடியா ஸ்டார்’ என்ற விருதும் வழங்கப்படவுள்ளது.

மலேசிய நட்சத்திரங்கள் பங்கேற்கிறார்களா?

மலேசியாவில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் விருது வழங்கும் விழாவில், மலேசிய நட்சத்திரங்களுக்கு விருதுகளோ அல்லது கலைநிகழ்ச்சி நடத்தும் வாய்ப்போ வழங்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் ராஜாமணி செல்லமுத்து, நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சைமா பொறுப்பு எடுத்து நடத்துவதால் இம்முறை மலேசிய நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.

எனினும், இந்த விழாவில் மலேசிய நட்சத்திரங்களுக்கு ஓர் இனிய செய்தி காத்திருப்பதாகவும் ஏற்பாட்டுக் குழுவினரில் ஒருவரான முருகையா தெரிவித்தார்.

நடிகர் சிரஞ்சீவிக்கு சிறப்பு விருது

இந்த நிகழ்வில் பேசிய மலேசிய சுற்றுலாத்துறையின் அனைத்துலக நிகழ்வுகளின் தலைவர் டோனி நாகமையா, முழுக்க முழுக்க மலேசிய சுற்றுலாத்துறையை வளப்படுத்தும் நோக்கில் இந்த மாபெரும் விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த விழாவில் சிறப்பம்சமாக, மத்திய அமைச்சரவையில் இருந்து இந்திய சுற்றுலாத்துறைக்கு, பெரும்பங்காற்றிய நடிகர் சிரஞ்சீவிக்கு உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாகவும் டோனி நாகமையா குறிப்பிட்டார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் நட்சத்திரக் கொண்டாட்டத்தில்  கலந்து கொள்ள www.ticketpro.com.my என்ற இணையத்தள முகவரிக்கு சென்று உங்களது அனுமதிச் சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சி குறித்த மேல்விபரங்களுக்கு www.astroulagam.com.my எனும் அகப்பக்கத்திற்குச் செல்லவும்.

செய்தி, படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்