கோலாலம்பூர், செப்டம்பர் 26 – இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அம்னோவில் துணைத் தலைவராகவும், நிதியமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலகட்டம்.
இரண்டு பேர் அவரது செயலாளர்களாக, வலது கரமாகவும், இடது கரமாகவும் செயல்பட்டு அம்னோ மற்றும் அரசாங்க வட்டாரங்களில் அதிகமாகப் பேசப்பட்டார்கள். சில எதிர்மறை விமர்சனங்களும் அவர்களைப் பற்றி அடிக்கடி எழுந்தன.
அவர்களில் ஒருவர் எசாம் முகமட் நோர். இன்னொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை சிலாங்கூர் மாநிலத்தின் 15வது மந்திரி பெசாராகப் பதவியேற்ற அஸ்மின் அலி.
அந்த காலகட்டத்தில் அன்வாரை நெருங்க நினைத்த வர்த்தகப் பிரமுகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பாலமாகத் திகழ்ந்தவர்கள் எசாம் முகமட் நோரும், அஸ்மின் அலியும்.
காலப்போக்கில், அரசியலில் நிகழ்ந்த அதிரடி தலைகீழ் மாற்றங்களால், அன்வார் பதவி இறக்கம் செய்யப்பட்டார். அவரது செயலாளர்களாக, அவருக்கு நெருக்கமானவர்களாக அப்போதிருந்த அஸ்மின் அலியும், எசாம் நோரும் அன்வாருக்காக வீதிப்போராட்டங்களில் இறங்கி போராடினார்கள்.
அன்வார் சிறைக்குள் இருந்த காலத்தில் தங்களின் முன்னாள் தலைவருக்காக உருவாக்கப்பட்ட பிகேஆர் கட்சியில் சேர்ந்து அரசியல் போராட்டங்களில் ஈடுபட்ட இருவரில் எசாம் முகமட் நோர், எதிர்க்கட்சி அரசியலின் தீக்கனல் தாக்கத்தைத் தாங்க முடியாமல், அம்னோவில் ஐக்கியமானார்.
இடைத் தேர்தல் – பொதுத் தேர்தல் மேடைகளில் அன்வாரையும் பிகேஆர் கட்சியையும் சரமாரியாகத் தாக்கிப் பேசினார். அந்த கட்சி மாற்ற துரோகத்திற்காக, பின்னாளில் அவருக்கு செனட்டர் பதவியும் வழங்கப்பட்டது.
அஸ்மின் அலியோடு எசாம் கொண்ட கருத்து முரண்பாடும், அன்வார் தன்னை விட அஸ்மினுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகின்றார் என்ற அவரது அதிருப்தியும்தான் அவரை அம்னோவுக்கு விரட்டியடித்தன என்றொரு தகவலும்கூட அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டன.
எதிர்க்கட்சி அரசியலில் தாக்குப் பிடித்த அஸ்மின் அலி!
ஆனால், அஸ்மின் அலியோ எதிர்க்கட்சிகளின் அரசியல் அனலிலும் தாக்குப் பிடித்தார். ஒருபக்கம், பிகேஆர் கட்சியில் சுற்றிச் சுழன்று வந்து அடிமட்டத் தொண்டர்களின் அபிமானத்தைப் பெற்றார்.
அன்வார் சிறை சென்ற காலத்திலிருந்து அவருடன் போராட்டக் களத்தில் இருந்தவர் என்பதால் அன்வார் அபிமானிகளுடன் வெகு சுலபமாக அவரால் அரசியல் ரீதியாக ஒன்றாகக் கலக்க முடிந்தது. அன்வார் விசுவாசிகளில் முதல் விசுவாசியாக இன்றைக்கும் அஸ்மின் பிகேஆர் கட்சியினரால் பார்க்கப்படுகின்றார்.
அன்வார் பக்கம் இறுதி வரை ஒரு போராளியாக, தளபதியாக, கற்பாறை போல் நின்ற காரணத்தால், தனது சொந்த குடும்பத்தினரையும், சகோதர, சகோதரியையும் பகைத்துக் கொண்டவர் என்ற கூடுதல் தகுதியும் அஸ்மினுக்கு உண்டு.
இன்னொரு புறத்தில் அன்வாரின் குடும்ப அரசியலையும் சமாளித்தார் அஸ்மின்.
அன்வாரைத் தவிர, அவரது குடும்பத்தினர்களான அவரது மனைவி வான் அசிசாவும், அன்வாரின் மகள் நுருல் இசாவும் அஸ்மின் அலிக்கு மறைமுக எதிர்ப்பைக் காட்டுபவர்கள் என்பது பிகேஆர் கட்சி வட்டாரங்களில் எல்லாருக்கும் உள்ளங்கை நெல்லிக்காயாக தெரிந்த அரசியல் இரகசியம்.
இருப்பினும், அந்த உட்பகை தனது அரசியல் வளர்ச்சிக்கு தடையாக இருக்காதவாறு பார்த்துக் கொண்டார் அஸ்மின்.
இன்னொரு பக்கம், பாஸ் கட்சியோடும் நல்லுறவைப் பேணி வந்தார்.
காலிட் இப்ராகிமிற்குப் பிறகு சிலாங்கூரின் அடுத்த மந்திரி பெசார் யார் என்ற கேள்வி எழுந்தபோது, பாஸ் கட்சியில் உள்ள சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் முதற்கொண்டு, பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் வரை ஒருமுகமாக கைநீட்டிய மந்திரி பெசார் வேட்பாளர் அஸ்மின் அலிதான்.
பாஸ் கட்சியோடு அஸ்மின் அலிக்கு இருந்த நெருக்கத்தையும் பரஸ்பர மரியாதையையும் இந்த நிகழ்வு எடுத்துக் காட்டியது.
அதே நேரத்தில் பிகேஆர் கட்சியின் அடையாளமான அன்வார் இப்ராகிமின் விசுவாசத் தொண்டராகவும் தொடர்ந்தார் அஸ்மின் அலி.
பிகேஆர் கட்சியின் அரசியல் நிலவரத்தை நன்கு உணர்ந்திருக்க அஸ்மின், சாமர்த்தியமாக எப்போதுமே, பொதுத் தேர்தல்களில் சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்று வந்தார். பிகேஆர் கட்சியில் மற்ற யாருக்கும் கிடைக்காத சலுகை இது.
காலிட் இப்ராகிமின் எதிர்ப்பையும் சமாளித்தார்
சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரி பெசார் பதவி டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமிற்கு வழங்கப்பட்டபோதும் அமைதி காத்தார் அஸ்மின். கட்சிப் பணிகளில் மட்டும் தீவிரம் செலுத்தி வந்தார்.
ஆனால், ஒரு கால கட்டத்தில் முன்னாள் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் அஸ்மின் அலிக்கு எதிராக நேரடியாகத் தாக்குதல் தொடங்கி, அரசியலில் தனக்குத் தானே தூக்குக் கயிறைத் தேடிக் கொண்டார்.
சிலாங்கூரில் காலிட் இப்ராகிம் மீது ஏற்கனவே அதிருப்தி கொண்டிருந்த பிகேஆர் கட்சியினரும், சட்டமன்ற உறுப்பினர்களும், அஸ்மின் அலிக்கு ஆதரவாக அணிவகுக்கத் தொடங்கினர்.
தனது வியூகத்தால், காலிட் இப்ராகிமின் பிறப்பிடமான – சொந்த தொகுதியான கோலசிலாங்கூரில் ஓர் இந்தியரான மாணிக்கவாசகத்தை நிறுத்தி காலிட்டை தொகுதி தலைவர் தேர்தலில் தோற்கடித்தார் அஸ்மின்.
கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியில் குதித்த அஸ்மின் அங்கும் காலிட் இப்ராகிம் காட்டிய எதிர்ப்பைச் சமாளித்தார்.
சிலாங்கூரை விட்டு வெளியே அவ்வளவாகப் போகாதவர் காலிட். உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு தனது நிர்வாகத்திறனைக் காட்ட நினைத்தவர் அவர்.
ஆனால், அஸ்மினோ கடந்த 15 ஆண்டுகளாக, பிகேஆர் கட்சி தொடங்கியதிலிருந்து நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் உள்ளே நுழைந்து, வலம் வந்தவர்.
அதனால், பிகேஆர் கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்கும் முறையில் அமைந்த அந்த கட்சியின் தேசியத் துணைத் தலைவர் தேர்தலிலும் அஸ்மினால் சுலபமாக வெல்ல முடிந்தது.
அன்வாருடனான நெருக்கம்
அன்வாரின் செயலாளராகச் செயல்பட்ட காலம் முதல் அஸ்மின் அலிக்கும் அன்வாருக்கும் இருந்து வரும் நெருக்கமும் அரசியல் வட்டாரங்களில் வெகு பிரசித்தம். அதையும் முறையாகக் கட்டிக் காத்து வந்தார் அஸ்மின்.
ஆனால், இடைப்பட்ட காலத்தில் என்ன நேர்ந்ததோ, யாருடைய கண்பட்டதோ தெரியவில்லை. அன்வாரே, அஸ்மின் அலிக்கு எதிராக பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோனை கட்சியின் தேசியத் துணைத் தலைவர் போட்டியில் ஆதரிப்பதாக தகவல் ஊடகங்கள் பகிரங்கமாக செய்தி வெளியிட்டன.
ஆனால், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அஸ்மின் முந்திக் கொண்டிருக்கின்றார் என்ற தகவல்கள் வெளிவரத் தொடங்கிய பின்னர், அன்வாருக்கும் அஸ்மினுக்கும் இடையில் இருந்த உறவு மீண்டும் சகஜ நிலைமைக்குத் திரும்பியது.
அண்மையில் இலண்டனில் ஒரு மாநாட்டுக்கு சென்ற அன்வாரும், அஸ்மினும், அங்கே மனம் விட்டுப் பேசி, தங்களுக்குள் இருந்த பிணக்குகளைத் தீர்த்துக் கொண்டனர் என்றொரு தகவலும் உண்டு.
அஸ்மின் அலியின் குடும்பத்தினர்…
சிறந்த அறிவாற்றலையும், வியூகத் திறனையுக் கொண்டு எதிரியை வீழ்த்துவதை, ஒரு விவகாரத்தில் வெற்றி கொள்வதை, ஆங்கிலத்தில் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ (Master Stroke) என்பார்கள்.
அஸ்மின் அலியின் அத்தகைய உச்சகட்ட அரசியல் வியூகத்தை சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரத்தில் அவர் வெளிப்படுத்திய விதத்தில் பார்க்க முடிந்தது.
காலிட் இப்ராகிம் ஏற்படுத்திய குழப்பத்தால் நிகழ்ந்த அடுக்கடுக்கான சம்பவங்களின் வழி, அடுத்த மந்திரி பெசாராக வருவதற்கு தனக்கு ஒரு சாதகமான வாய்ப்பு இருக்கின்றது என்பது உணர்ந்து கொண்ட அவர், கட்டம் கட்டமாக தனது காய்களை நகர்த்தினார்.
அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த பாஸ் கட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களுடன் கலந்துரையாடத் தொடங்கினார். ஏற்கனவே, ஜனநாயக செயல் கட்சியுடன் அவருக்கு நல்லுறவு இருந்தது.
இருப்பினும், கட்சியின் துணைத் தலைவராக இருந்தாலும், தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல், வான் அசிசாவையே அஸ்மின் ஆதரித்தார். அவருக்கு ஆதரவான சத்தியப் பிரமாணத்திலும் கையெழுத்திட்டார்.
வான் அசிசாவுக்கு மந்திரி பெசார் பதவியை வழங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த, சிலாங்கூர் சுல்தான், பிகேஆர் கட்சியைச் சேர்ந்த இன்னொருவருக்கு, அதுவும் கட்சியின் துணைத் தலைவராக இருப்பவருக்கு அந்தப் பதவியை வழங்கினால்தான் சிக்கலைத் தீர்க்க முடியும் என்ற ரீதியில் சிந்தித்து தன்னிச்சையாக முடிவெடுக்க, மந்திரி பெசார் பதவி இன்றைக்கு அஸ்மின் அலியின் மடியில் வந்து விழுந்திருக்கின்றது.
தனது தாயாரின் அன்பையும் ஆசியையும் பெறும் அஸ்மின் அலி ….
அரசியலில் ஈடுபடும் அனைவருக்கும் எதிர்கால பதவிக் கனவுகள் கண்டிப்பாக இருக்கும். அஸ்மின் அலிக்கும் அந்த கனவு இருந்ததால்தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டே சட்டமன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து பதவி வகித்து வந்தார்.
ஆனால், இப்படிப்பட்ட ஒரு சூழலில் அந்தப் பதவி தன்னைத் தேடி வரும் என அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.
அன்வாரின் தனிச் செயலாளராகத் தொடங்கிய அவரது அரசியல் பயணத்தில், இன்றைக்கு மந்திரி பெசார், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர், என காலம் அவரைக் கைப்பிடித்து அழைத்து வந்திருக்கின்றது.
இதுவரையில் அவரது அரசியல் பயணத்தைப் பார்த்து வருபவர்களுக்கு, அடிமட்டத் தொண்டர்களின், மக்களின், உணர்வுகளை உணர்ந்தவர் அவர் என்பது புலப்படும்.
அந்த வகையில் சிலாங்கூரில் இனி அவரது அதிரடி அரசியல் ஆரம்பிக்கும்.
சுல்தான் முதற்கொண்டு, அனைத்து மக்கள் கூட்டணிக் கட்சிகள், பிகேஆர் தலைமைத்துவம் மற்றும் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் வழங்கியுள்ள ஆதரவு, அவருக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்திருக்கின்றது.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரத்தால், மக்கள் கூட்டணித் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட பிளவுகளையும், பிணக்குகளையும், சரிப்படுத்தி,
அவர்களுக்கிடையில் மீண்டும் பழைய அரசியல் இணக்கத்தைக் கொண்டு வந்து, மக்கள் கூட்டணியை மீண்டும் பழைய பாதையில் செலுத்தக் கூடிய ஒருங்கிணைப்பாளராக, தலைமைத்துவ ஆற்றல் கொண்டவராக, அஸ்மின் அலியை மக்கள் கூட்டணி ஆதரவாளர்கள் பார்க்கின்றனர்.
அஸ்மின் அலி, சிலாங்கூரில் சிறந்த நிர்வாகத்தைக் கொண்டுவர, மக்களுக்குப் பயனான திட்டங்களை, மாற்றங்களைக் கொண்டுவர, நாமும் வாழ்த்துவோம்!
-இரா.முத்தரசன்